தூக்கத்துக்கு மெத்தை எவ்வளவு முக்கியமோ மெத்தை உறையும் அவ்வளவு முக்கியம் என்று அடித்துக் கூறுவோர் உண்டு.
நம்மில் சிலர் ஆண்டுக்கு ஒரு முறை மெத்தை உறைகளை மாற்றலாம். வேறு சிலருக்கு மெத்தை உறை பழையதானால்தான் அதை மாற்ற வேண்டும் என்று தோன்றும்.
மெத்தை உறைகளை வாங்கச் செல்லும்போது அங்கு இருக்கும் பல வகைகளில் நமக்கு எதைத் தேர்வு செய்வது என்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
துணிவகை
சிங்கப்பூர் போன்ற வெப்பம் அதிகமுள்ள நாடுகளில் பருத்தி பிரபலம். எகிப்தில் உற்பத்தியாகும் பருத்திதான் ஆக உயர்ந்த தரத்தில் உள்ள பருத்தி என்று கூறப் படுகிறது.
நீளமான பருத்திநார் இதற்குப் பயன்படுத்தப்படுவதே முக்கிய காரணம். இந்த வகை மெத்தை உறைகள் பொதுவாக அதிக விலை உள்ளவை.
'சுப்பிமா' பருத்தி என்று வகைப் படுத்தப்பட்ட மெத்தை உறைகளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். இந்த வகை அமெரிக்காவில் உள்ள பிமா பருத்தியைக் கொண்டு நெய்யப்படும் துணியில் தைக்கப்படுகின்றன.
இவையும் நீளமான பருத்தி நாரைக் கொண்டு நெய்யப்படுகின்றன. நீண்டகாலம் உழைக்கக்கூடிய, தொடுவதற்கு மென்மையான பருத்தித் துணி இது.
தற்போது கடைகளில் 'டென்செல்' என்ற வகை மெத்தை உறைகள் கிடைக்கின்றன. லயோசெல் எனும் நிறுவனம் உருவாக்கிய துணிவகை இது. மரத்தின் நாரிலிருந்து துணி உற்பத்தி செய்யப் படுகிறது.
இதன் உற்பத்தியில் உண்டாகும் கழிவுகள் புதுப்பிக்கப்படக் கூடியவை என்பதால் இது சுற்றுச்சூழலுக்கு ஏதுவானது. தொடுவதற்கு மென்மையாக இருந்தாலும் பருத்தி போல காற்று செல்லக் கூடிய தன்மை இதில் அவ்வளவாக இல்லை.
செயற்கை பருத்தி நூல்களைப் பயன்படுத்தும் மைக்ரோஃபைபர் வகை மெத்தை உறைகளை நாம் அதிகம் பார்க்கலாம். பருத்தி போன்ற மென்மை இவற்றில் இல்லா விட்டாலும் துவைக்க துவைக்கக் காலப்போக்கில் இந்தத் துணியின் மென்மை கூடுகிறது.
நூல்கணக்கு
மெத்தை உறைகளில் நூல் கணக்கு குறிப்பிடப்படுவதுண்டு. 900, 1,000 என்று அவை சென்றாலும் 500க்கு மேற்பட்ட நூல் கணக்கு உள்ள மெத்தை உறைகள் பொது வாக நல்ல தரமுள்ளவையாகக் கருதப்படுகின்றன.
ஆனால் லினன் போன்ற துணிகளில் நூல் கணக்கு குறைவாக இருந்தாலும் அவை தரமானதாகக் கருதப்படும்.
தேர்வுசெய்ய சில குறிப்புகள்
மெத்தை உறையைத் தேர்வு செய்யும்போது, துணியில் காற்று செல்கிறதா என்று கவனிப்பது முக்கியம். நமது உடலிலிருந்து வெளியாகும் உஷ்ணக் காற்றை உள்வாங்கும் தன்மை மெத்தை உறைக்கு இருப்பது நல்லது.
பிறகு மெத்தை உறையைத் துவைக்கும் முறையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சரியான அளவில் மெத்தை உறை இருக்கிறதா என்றும் நீங்கள் தீர்மானிக்க வேண்டும். பின்னர் அதன் தொடு தன்மையும் மென்மை யும் உங்களுக்கு ஏற்ற விதத்தில் உள்ளதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இறுதியாக மெத்தை உறையின் வண்ணம். பொதுவாக வெள்ளை, சாம்பல், மணல், போன்ற நிறங்களில் உள்ள மெத்தை உறைகள் பிரபலம்.

