பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவிலும் சீனாவிலும் பல்வேறு வழிகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மூச்சுப் பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளைத் தருகின்றன.
உடலில் உயிர்வாயுவைப் பெருகச் செய்து அழுக்குகளை வெளியேற்ற உதவும் மூச்சுப் பயிற்சி, எதிர்ப்புசக்தியைக் கூட்டுகிறது.
உடல் செரிமானம், இதய நலம், பளிச்சென்ற சருமம் போன்றவற்றுக்கும் மூச்சுப் பயிற்சி உதவுகிறது. கவலையைக் குறைத்து, தூக்கம் எளிதில் வரவும் மூச்சுப் பயிற்சி கைகொடுக்கிறது.
ரத்த அழுத்தம் குறையவும் கவனிக்கும் ஆற்றலைப் பெருக்கவும் மூச்சுப் பயிற்சி உதவுவதாகக் கூறப்படுகிறது. சுவாசப் பிரச்சினைக்கும் ஆஸ்துமா, மூச்சுத் திணறல் ஆகியவற்றுக்கும் அது நல்ல தீர்வாகும்.
குறிப்பாக, காலையில் செய்வது போன்று இரவு தூங்கச் செல்லும் முன்பும் ஒருமுறை மூச்சுப்பயிற்சி செய்யலாம். ஆனால் இரவு உணவுக்கும் உறங்கச் செல்வதற்கும் இடையே குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.
யோகாசனத்தில் கபாலபதி, நாடிசுத்தி உள்ளிட்ட மூச்சுப் பயிற்சி முறைகள் கற்றுத் தரப்படுகின்றன. முறையாக பயிற்றுவிப்பாளரிடம் அவற்றைப் பயில்வதே சிறந்தது. சில மூச்சுப் பயிற்சிகளை எல்லாரும் செய்ய முடியாது என்பதே இதற்குக் காரணம்.
எளிய முறையில் ஆழ்ந்து மூச்சுவிட்டாலும் நன்மைதான்.
முதன்முறையாக மூச்சுப் பயிற்சி செய்பவர்கள், வசதியான இடத்தில் அமர்ந்து அல்லது படுத்துக்கொண்டு எளிய மூச்சுப் பயிற்சி செய்யலாம். இந்த முறையில், முதலில் சாதாரணமாக மூச்சு விடவேண்டும். பின்னர் மூக்கு வழியாக மெதுவாக மூச்சுவிட வேண்டும்.
மூச்சை உள்ளிழுக்கும்போது நெஞ்சுப் பகுதியில் வயிறும் மேல் எழும். வயிற்றுப் பகுதி முழுமையாக விரிவடைய வேண்டும். பின்னர் வாய் வழியாக மூச்சை வெளியில் விட வேண்டும்.
மூச்சில் கவனத்தைக் குவிக்கும் முறையே மிக எளிமையானது என்கிறது ஹெல்த்ஹப் இணையத் தளம். நாசி வழி மூச்சு லேசாக உள்ளேயும் வெளியேயும் வெளிவரும்போது வயிறு மேலேயும் கீழேயும் செல்வதைக் கவனிக்க வேண்டும். மூச்சு விடும் விதத்தை மாற்ற முயற்சி செய்ய வேண்டாம். வழக்கமாக மூச்சுவிடும் விதத்தை கவனித்திருந்தால் போதும் என்கிறது ஹெல்த்ஹப்.

