மரவள்ளிக் கிழங்கு சாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காதபோது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்வாழ்ந்திருக்கிறார்கள்.
இந்தக் கிழங்கு மருத்துவரீதியாக பல பயன்களைக் கொண்டது. மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் குடலில்
தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. செரிமான மண்டலத்தை சீராக்கி, மென்மையான குடல் இயக்கத்துக்கு வழி
வகுக்கிறது.
கண் பார்வை பிரச்சினைக்கு முக்கிய காரணம் கைத்தொலைபேசி, கணிணி முன்பு நீண்ட நேரம் அமர்ந்திருப்பது. அதனால் கண்களில் வறட்சி ஏற்பட்டு பார்வைக் குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இந்தக் குறைபாட்டை நீக்க வைட்டமின் 'ஏ' நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மரவள்ளிக் கிழங்கில் வைட்டமின் 'ஏ' நிறைந்திருக்கிறது. இதில் இருக்கும் 'போலேட்', வைட்டமின் 'சி' ஆகியவையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் ஆன்டிஆக்சிடன்டுகளும் மரவள்ளிக்கிழங்கில் இருக்கின்றன.
உடல் பருமனைக் குறைப்பதில் அதிக பங்காற்றுகிறது. உடல் எடையை இயற்கையாக குறைக்க விரும்புபவர்கள் மரவள்ளிக் கிழங்கை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் போதும். அதில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்க உதவும்.
தலைவலி, முதுகுவலி பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் கிழங்கை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் அரைத்து நாள் ஒன்றுக்கு இருமுறை பானமாக பருகினால் இந்தப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மேலும் மரவள்ளிக் கிழங்கு ஞாபக மறதியை குறைப்பதுடன் ரத்தத்தில் அதிக அளவில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய வைக்கும். மரவள்ளி கிழங்கில் உருவாக்கப்படும் ஜவ்வரிசிக் கஞ்சி வயிற்றுப் புண் மற்றும் உடல் சூட்டைக் குறைக்கும். மரவள்ளி கிழங்குகளில் இருக்கும் வைட்டமின் 'கே' மற்றும் 'கால்சியம்' ஆகியவை எலும்புகளை வலுவாக்கும்.
இத்தனை பலன்கள் கொண்ட மரவள்ளிக் கிழங்கைப் பயன்படுத்தி வடை செய்யலாம் வாருங்கள்.
தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ, ஊறவைத்த கடலைப்பருப்பு - 200 கிராம், பச்சரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவியது), பூண்டு - 10 பல்,
சோம்பு - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, கிராம்பு - 2, பச்சை மிளகாய் - 4, காய்ந்த மிளகாய் - 4, புதினா - ஒரு கைப்பிடி அளவு, சிறியதாக வெட்டிய வெங்காயம் - 100 கிராம், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 500 மில்லி.
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். ஊறவைத்த பருப்புடன் இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், புதினா, அரிசி மாவு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெய்யில் போட்டு எடுக்கவும். மரவள்ளிக்கிழங்கு மசால் வடை தயார். இது தயிர் சாதத்துக்கு சுவையாக இருக்கும். மருத்துவ பயன்மிக்க மரவள்ளிக்கிழங்கை மறக்காமல் உணவில் சேர்ப்போம்.

