உணவு, உடை, சாதனங்கள் வாங்குவது, நிதி மேலாண்மை, வேலை, சமூக ஊடகங்களில் பதிவிடுதல் எனக் கிட்டத்தட்ட எல்லாவற்றுக்குமே இன்று இணையம் இன்றியமையாததாக இருக்கிறது.
ஆனால், மின்னஞ்சல் சேவையில் கொடிகட்டிப் பறக்கும் 'ஜிமெயில்' சேவைக்கு இனி இணையத் தொடர்பு தேவைப்படாது.
இணையத் தொடர்பு இல்லாமலேயே மின்னஞ்சல் பார்க்கும் வசதியை ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டில் உலகம் முழுதும் 1.8 பில்லியன் பேர் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தினர். மின்னஞ்சல் சந்தையில் 18 விழுக்காட்டை ஜிமெயில் சேவை தன்வயப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மேலும் பல இணையவாசிகளை ஈர்க்கும் நோக்கில், இணையத் தொடர்பு இல்லாமலேயே மின்னஞ்சல் பார்க்கும் வகையில் 'ஜிமெயில் ஆஃப்லைன்' எனும் அம்சத்தை ஜிமெயில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இதன்மூலம், இணையத் தொடர்பு இல்லாமலேயே ஜிமெயிலில் மின்னஞ்சல் படிக்கலாம், பதில் அனுப்பலாம், தேடலாம். 'குரோம்' உலாவியில் மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும்.
'ஜிமெயில் ஆஃப்லைன்' சேவையை இயக்கத்தில் வைத்து இருப்பதற்கான வழிமுறைகள் இதோ:
♦ mail.google.com என்ற இணையப்பக்கத்திற்குச் செல்லவும்.
♦ உங்களது மின்னஞ்சல் பெட்டிக்குள் நுழைந்தபின், அமைப்புகள் (settings) பொத்தானைச் சொடுக்கவும்.
♦ பிறகு 'அனைத்து அமைப்புகளையும் காட்டு (see all settings)' பொத்தானைச் சொடுக்கவும்.
♦ அதில், மேலுள்ள வரிசையில் 'ஆஃப்லைன்' தாவியைச் (tab) சொடுக்கவும்.
♦ பின்னர் 'ஆஃப்லைன் அஞ்சலை இயக்கு (Enable offline mail)' கட்டத்தில் புட்குறி (tick) இடவும். உடனே, புதிய அமைப்புகள் காட்டப்படும்.
♦ அதில் ஆஃப்லைன் அஞ்சல் சேவைக்கு கணினியில் எவ்வளவு இடம் பயன்படுத்தப்படும் எனும் விவரம் காட்டப்படும். கடைசி ஏழு நாள்கள் முதல் 90 நாள்கள் வரையிலான மின்னஞ்சல்களைச் சேமித்து வைக்க முடியும். அவற்றுடன், இணைப்புகளைப் (attachments) பதிவிறக்கம் செய்ய வேண்டுமா வேண்டாவா என்பதையும் நாமே முடிவுசெய்யலாம்.
♦ ஆஃப்லைன் தரவுகளை வைத்திருக்க வேண்டுமா அல்லது அழிக்க வேண்டுமா எனத் தேர்வுசெய்தபின், 'மாற்றங்களைச் சேமி (save changes)' என்பதைச் சொடுக்கவும். உங்களது கணினியில் ஆஃப்லைன் ஜிமெயில் வசதி செயல்பாட்டிற்கு வந்துவிடும்.
ஐஃபோன் பயனர்கள் கடவுச்சொல் சேமிக்க குரோமில் புதுவசதி
ஐஓஎஸ் இயங்குதளத்திற்கான குரோன் உலாவியில் (Chrome browser) கூகல் நிறுவனம் ஒரு புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளது. அதன்மூலம், எந்த ஓர் இணையத்தளத்திற்கான அல்லது செயலிக்கான கடவுச்சொல்லையும் பயனர்கள் தங்களது சாதனத்தில் விரைவாகவும் பாதுகாப்பாகவும் உருவாக்கவும், சேமிக்கவும், நிரப்பவும் முடியும்.
அத்துடன், தகவல் திருட்டு, நச்சுநிரல்கள், இணையவழி அச்சுறுத்தல்கள் போன்றவற்றில் இருந்து ஐஃபோன், ஐபேட் பயனர்களைப் பாதுகாக்கும் அம்சம் உள்ளிட்ட பல புதிய அம்சங்களையும் கூகல் அறிவித்துள்ளது.

