செடிகளுடன் நட்பும் மலரும் இடமாக சிங்கப்பூரிலுள்ள சமூகத் தோட்டங்கள் உருவாகி வருகின்றன. சிங்கப்பூரில் 1,700க்கும் மேற்பட்ட சமூகத் தோட்டங்கள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?
தோட்டக்கலையில் ஆர்வமுள்ளவர்கள் சமூகத் தோட்டங்களை நாடுகின்றனர். அங்கு தங்களைப் போன்ற பிற தோட்டக்கலை ஆர்வலர்களைச் சந்திக்கின்றனர். இந்த ஒருமித்த ஆர்வமே புதிய நட்புக்கு விதையாக அமைந்துவிடுகிறது.
மேலும், இயற்கையுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் சமூகத்தினருடன் கலந்துறவாடவும் சமூகத் தோட்டங்கள் வாய்ப்பளிக்கின்றன.
அதுமட்டுமல்ல, ஒருவர் உட்கொள்ளக்கூடிய பயிர்களையும் சமூகத் தோட்டங்களில் விதைக்க முடிகிறது. வசதிகுறைந்த குடும்பங்களுக்கு அவர்களின் வட்டாரச் சமூகத் தோட்டங்களில் விளைந்த பழங்களையும் காய்கறிகளையும் வழங்கும் திட்டம் ஒன்றும் நடப்பில் உள்ளது.
அரிய, கவர்ச்சியான பறவை வகைகளையும் பட்டாம்பூச்சிகளையும் இச்சிறு சிறு இயற்கை வனங்கள் ஈர்ப்பதையும் நம் குடியிருப்புகளில் அண்மைய காலமாக அதிகம் காண முடிகிறது.
'சமூகத் தோட்டக்கலைத் திட்டம்' என்ற நாடளாவிய தோட்டக்கலை இயக்கம் 2005ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கியது முதல் 40,000க்கும் மேற்பட்ட தோட்டக்கலை ஆர்வலர்கள் இத்திட்டத்தின் கீழ் இணைந்துவிட்டனர்.
ஒரே குடியிருப்பு வட்டாரத்தில் வெவ்வேறு பிரிவினர், வெவ்வேறு குடும்பப் பின்னணிகளைக் கொண்டவர்களாக வசிக்கின்றனர். தங்கள் வட்டாரச் சமூகத் தோட்டத்தை உருவாக்கி, வடிவமைத்து, அதைப் பராமரிப்பதில் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.
தோட்டக்கலையைப் பற்றி அறிந்திராதவரும் பிறர் மூலம் விழிப்புணர்வு பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. சமூகத்திற்கும் நாட்டுக்கும் பங்காற்றுகிறோம் என்ற எண்ணமும் வளர்கிறது.
அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களுக்குச் சமூகத் தோட்டம் போன்ற சமூக வசதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் திட்டமும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
பூக்கள், காய்கறிகள், மசாலா பொருள்கள், பழங்கள் என ஒட்டுமொத்த சிங்கப்பூரையே ஒரு பெருந்தோட்டமாக உருமாற்றும் வகையில் இச்சமூகத் தோட்டங்கள் பங்காற்றுகின்றன.
அண்டைவீட்டார், வேலை நண்பர்கள், தோழர்கள் ஆகியோர் சமூகத் தோட்டங்களில் கூடி இத்தகைய அர்த்தமுள்ள நடவடிக்கையில் ஈடுபடும் அனுபவங்களும் மறக்க முடியாதவை. குறிப்பாக, நம் பல்லின சமுதாயத்தில் ஒத்துழைப்பு, தொண்டூழியம், பன்முகத்தன்மைக்கு மதிப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சமூகத் தோட்டங்கள் உணர்த்துகின்றன.
செய்தி: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்,
தேசிய பூங்காக் கழகம்

