மனத்திரையில் இருப்பதை நம் கண்களே காட்டிக்கொடுத்துவிடும் என்பார்கள். ஆனால் ஒருவரது ஒட்டுமொத்த சுகாதாரத்தை மேலும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கும் அதே கண்கள் உதவுகின்றன.
வயது காரணத்தால் கண்பார்வைக் கோளாறுகளுக்கு இட்டுச் செல்லும் அறிகுறிகளை நம் கண்கள் ஆரம்ப காலத்திலேயே காட்டிவிடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கு ஒரு சிறு சோதனையைச் செய்து பார்க்க முடியும் என்கின்றனர்.
ஒரு கதவு அல்லது சன்னல் சட்டத்தை நேரே நின்று பார்த்தவாறு கையால் ஒரு கண்ணை மூடிக்கொள்ள வேண்டும். பின்னர் கையை அகற்றி மறு கண்ணை மூட வேண்டும். இதைப் பலமுறை செய்துகொண்டே இருங்கள்.
"உங்கள் பார்வை தெளிவாக இல்லாமல் மங்கலாகவோ இடைவெளிகள், வரிகளுடனோ தெரிந்தால் உடனே கண்களைச் சோதித்துப் பாருங்கள். கண் தொடர்பான பிரச்சினைகளுக்கு இது ஆரம்ப அறிகுறிகள்," என்கிறார் கண்பார்வை நிபுணர் சுஜாதா பால். 'கார்னியா' எனப்படும் விழி வெண்படலத்தில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் அவை எச்சரிக்கை விடுக்கும் அறிகுறிகள். உடனே கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
சில சமயங்களில், நம் கண் துடிப்பது போன்றிருக்கும். களைப்பு மிகுதி இதற்குக் காரணமாக இருக்கலாம். அத்துடன் அளவுக்கு அதிகமான மதுபானம், காப்பி, சிகரெட் போன்றவற்றாலும் கண் இவ்வாறு துடிக்கலாம். ஓய்வு எடுக்கவும் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ளவும் உங்கள் உடல் கூறுவதாக அமைந்த அறிகுறி இது என்கிறார் அவர். அதேபோன்று கண்கள் வீக்கத்துடன் சிவந்தபடி இருந்தால் அது ஒவ்வாமை காரணமாகவோ களைப்பு காரணமாகவோ இருக்கலாம் என்கிறார்.
கண்பார்வை மங்கலாகும்போது நீரிழிவு நோய், கண்புரை போன்றவற்றுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். ரத்தத்தில் அதிகமான இனிப்பு அளவு இருக்கும்போது விழித்திரையின் ரத்த நாளங்கள் பாதிக்கப்படும். பின்னர் அவை வீக்கமடைந்து ரத்தம் கசியலாம். அதனால் கண்பார்வை மங்கலாகும் வாய்ப்பு உள்ளது.
விழி வெண்படலத்தைச் சுற்றி வளையங்கள் தெரிந்தால் ரத்தத்தில் அதிகக் கொழுப்பு இருப்பதற்கு அவை அறிகுறிகளாக இருக்கலாம். கொழுப்புப் படிவுகள் உருவாகி விழி வெண்படலத்தைச் சுற்றி ஒரு வளையமாவது, ரத்தத்தில் அதிகக் கொழுப்பு இருப்பதற்கான ஆரம்ப அறிகுறி என்றார் சுஜாதா.
சில நேரங்களில் ஏதோ புழு போன்ற வடிவத்தை நாம் பார்த்திருக்கலாம். அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
ஆனால் ஒருவித வெளிச்சமும் தோன்றி பெரிய புழுக்கள் போன்ற வடிவங்கள் மிதப்பதைக் கவனித்தால், அது அபாயகரமானது. இத்துடன் அவ்வப்பொழுது கண்பார்வை தெரியாத நிலையும் சேர்ந்துகொண்டால் விழித்திரை பிரச்சினைக்கான அறிகுறியாக இது இருக்கலாம். உடனே இதைக் கவனிக்காவிட்டால் நிரந்தரமாகப் பார்வையை இழக்க நேரிடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

