பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகெடமியின் வருடாந்தர நிகழ்வான 'பாஸ்கரியம்', இம்முறை பிரெஞ்சுக் கலாசார நிலையத்தில், கச்ச தேவயானி கதையை கதகளியில் நாட்டிய நாடகமாக மேடையேற்றியது.
இந்தியாவின் புகழ்பெற்ற கலாமண்டலம் நிகழ்கலைப் பள்ளியின் பெருமைமிகு கலைஞர்களும் இதில் பங்குகொண்டனர்.
மகாபாரதக் கதைகளில் ஒன்று கச்ச தேவயானி. தேவ குருவான பிரகஸ்பதியின் மகன் கச்சனுக்கும் அசுர குருவான சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானிக்கும் இடையிலான காதலைச் சித்திரிக்கும் கதை இது.
கலாமண்டலம் பிஜு கச்சனாகவும் கலாமண்டலத்தின் ஓய்வுபெற்ற முதல்வர் ராஜசேகரன் தேவயானியாகவும் காண்போர் கண்களையும் கருத்தையும் கொள்ளை கொண்டனர்.
நடனமணிகளுக்குச் சற்றும் சளைக்காத வண்ணம் சதானம் ராமகிருஷ்ணன், கலாமண்டலம் அச்சுத வாரியர் ஆகியோர் செண்டை, மத்தளம் என தாள வாத்தியங்களில் திறன் காட்டினர்.
சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் உயிர்ப்புடன் திகழும் நிகழ்கலை வடிவங்களைக் கொண்டாடும் 'பாஸ்கரியம்' விழாவின் இறுதி நாளான இம்மாதம் 3ஆம் தேதி பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகெடமி கச்ச தேவயானி நாட்டிய நாடகத்தை அரங்கேற்றியது.
கச்சன் தேவயானியின் காதலைப் புறக்கணித்தாலும் கதகளியின்மேல் தங்களைக் காதல் கொள்ள வைத்தது இந்தப் படைப்பு என்கின்றனர் பார்வையாளர்கள்.