உணவைச் சமைத்த சிறிது நேரத்திலேயே உண்பதுதான் உடலுக்கு நலம் பயக்கும். நேரத்தைக் காரணம்காட்டி இன்று நம்மில் பலரும் சமைத்த உணவை உடனுக்குடன் உண்பதில்லை.
ஆறிய பிறகோ குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்தோ மீண்டும் சூடுபடுத்தி உண்பதால் உடலுக்குப் பல்வேறு தீங்குகள் ஏற்படும் என்கின்றனர் வல்லுநர்கள்.
உணவை ஆறவிட்டு சூடுபடுத்தும்போது அதில் கெடுதல் செய்யும் நுண்ணுயிரிகள் வளர ஏதுவாகிறது என்று உணவியல் நிபுணர்கள் சொல்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, உருளைக்கிழங்கை மீண்டும் சூடுபடுத்தினால் ஊட்டச்சத்துகள் அழிவதோடு நச்சுத்தன்மை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
சமைத்த சோற்றை மீண்டும் சூடுபடுத்துவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படக்கூடும்.
புரதச் சத்து நிறைந்திருக்கும் பருப்பு வகைகள், முட்டை, காளான் போன்றவற்றை மீண்டும் சூடுபடுத்தினால் செரிமானப் பிரச்சினைகளுடன் இதயப் பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.
கோழி இறைச்சியிலும் புரதச் சத்து அதிகம் உள்ளது. இதை சமைத்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பின்னர் மீண்டும் சூடுபடுத்தும்போது செரிமானப் பிரச்சினை மட்டுமின்றி 'ஃபுட் பாய்சன்' எனப்படும் உணவை நஞ்சாக்கும் தீங்கு நேரிடவும் இது வழிவகுக்கிறது.
கீரைகளில் இரும்புச் சத்து மட்டுமின்றி 'நைட்ரேட்' எனும் ரசாயனமும் உள்ளது. சமைத்த கீரையை மீண்டும் சூடாக்கும்போது இந்த ரசாயனம் 'நைட்ரைட்' ஆக மாறும். இது புற்றுநோயை உண்டாக்கும் எனக் கூறப்படுகிறது.
பீட்ரூட்டிலும் இந்த ' நைட்ரேட்' காணப்படுகிறது.
சமைத்த உணவை மீண்டும் சூடாக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தால் மட்டும் போதாது. அப்பளம் பொரிக்க, வடை சுட என்று ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தக்கூடாது.
இவ்வாறு சூடுபடுத்தினால், சமையல் எண்ணெய்யின் அடர்த்தி அதிகரிக்கும். இத்தகைய எண்ணெய், புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படக் காரணமாக அமையும்.
தகவல், படம்: இணையம்

