மாதங்கி இளங்கோவன்
கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலின் வீரியத்திலிருந்து மீண்டு வந்த நிலையில் இன்னும் கிருமித்தொற்று தலைதூக்கும் தருணத்திலும் கட்டுப்பாடுகள் இருக்க, அதே நேரம் இயல்பான கொண்டாட்டமாக தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை முஸ்லிம்கள் இன்று கொண்டாடுகின்றனர்.
இன்று பெருநாள் தொழுகைக்காக ஒரே நேரத்தில் ஏறக்குறைய 1,000 பேர் ஒன்றுகூடுவர் என எதிர்பார்க்கிறது டன்லப் ஸ்திரீட்டில் அமைந்துள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசல்.
தொழுகையில் கலந்துகொள்ள முன்கூட்டியே பதிவுசெய்தவர்களுக்கான முதலாவது வேளை தொழுகை காலை 7.30 மணிக்கும் இரண்டாவது தொழுகை காலை 8.45 மணிக்கும் தொடங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிவாசல்களில் காலை 10 மணிக்கு தொடங்கும் மூன்றாவது வேளை தொழுகையில் பங்குபெற பதிவு செய்ய வேண்டியதில்லை. இவ்வாண்டு ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்காக 66 பள்ளிவாசல்களில் 215,000க்கும் அதிகமான தொழுகை இடங்கள் வழங்கப்படுகின்றன.
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நேற்று அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் இஷா தொழுகைக்குப் பிறகு திக்ர் மற்றும் துஆ மஜ்லிஸ் நிகழ்வு நடைபெற்றது. இறைவனிடம் துஆ கேட்டதோடு புனித குர்ஆன் வசனங்களையும் முஸ்லிம்கள் ஓதினர்.
"முஸ்லிம்கள் ஒன்றுகூடும் இந்நன்னாள் கொண்டாட்ட உணர்வை மட்டுமின்றி தியாகங்களை நினைவுகூரும் நாளாகவும் அமைகிறது. காலங்காலமாக குர்பான் சடங்கு நடைபெற்றாலும் இவ்வாண்டு தவிர்க்க முடியாத காரணங்களால் அச்சடங்கு இல்லாமல் ஹஜ்ஜுப் பெருநாளை சற்று மாறுபட்ட விதத்தில் கொண்டாடுகிறோம்," என்றார் அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் மேலாளரான ஃபரீது மரைக்கார், 42.
ஹஜ்ஜுப் பெருநாளன்று தியாகத்தின் சின்னமாக குர்பான் சடங்கு இடம்பெறுகிறது. சிங்கப்பூரில் இவ்வாண்டு குர்பான் சடங்கு இடம்பெறாது என்பதால் ஆஸ்திரேலியாவில் இருந்து குர்பான் இறைச்சிக்கு ஒரு வாரமாவது காத்திருக்க வேண்டும் என்று திரு ஃபரீது கூறினார்.
குர்பான் சடங்கை மேற்கொண்ட பல குடும்பங்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஆட்டிறைச்சியின் ஒரு பங்கை மற்றவர்களுக்கு தரும் வழக்கம் உண்டு. அவர்கள் வழங்கும் ஆட்டிறைச்சி பள்ளிவாசலால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழை எளியவர்களுக்குக் கொடுக்கப்படும்.
தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் ஹஜ்ஜுப் பெருநாள் இப்ராஹிம் நபி செய்த தியாகங்களை நினைவுபடுத்தும் விதத்தில் அமைகிறது. இப்ராஹிம் நபியிடம் அவர்களுடைய அன்பு மகனான இஸ்மாயில் நபியை பலி கொடுக்க அல்லாஹ் கட்டளையிட்டதாக புனித குர்ஆனில் கூறப்படுகிறது.
அதற்கு இணங்கி தம் மகனை பலி கொடுக்கப்போகும் தறுவாயில் இப்ராஹிம் நபியின் பரந்த மனத்தைக் கண்ட அல்லாஹ், ஆட்டைப் பலி கொடுத்தால் போதும் என்று கூறினான். எனவே, இப்ராஹிம் நபியின் தியாக உள்ளத்தை என்றென்றும் மறக்காமலிருக்க இந்த நாள் முஸ்லிம்களுக்கு ஒரு முக்கிய திருநாளாக கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமிய சமயத்தின் ஐந்து தூண்களில் ஐந்தாம் தூணான ஹஜ்ஜைப் பூர்த்திசெய்ய புனித மக்காவில் ஹஜ் யாத்திரையை முஸ்லிம்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது மேற்கொள்கின்றனர். இந்த யாத்திரையின் நிறைவைக் குறிக்கிறது ஹஜ்ஜுப் பெருநாள்.
ஈராண்டுகளுக்குப் பின்னர் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள சிங்கப்பூரிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர்.
சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு இன்று ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம்கள் திரளாக பள்ளிவாசல்களில் தொழுகை மேற்கொள்ளவும் குடும்பங்களோடும் நண்பர்களோடும் சேர்ந்து கொண்டாடுவதற்கும் வாய்ப்பு அமைந்து உள்ளது.

