வாஷிங்டன்: அமெரிக்க விண் வெளித் துறையான நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி முதன்முறையாக எடுத்த வண்ணப் படங்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.
திட்டத்தில் பணியாற்றிய ஆய்வாளர்கள்கூட புகைப்படங்களைக் கண்டவுடன் வாயடைத்துப் போனதையும் கண்ணீர் சிந்தியதையும் வருணித்தனர்.
எண்ணில் அடங்காத நட்சத்திரங்கள், விண்வெளி திரள்கள், யாரும் இதுவரை பார்த்திராத துல்லியமான விவரங்கள் பலவற்றைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.
நாசா வெளியிட்ட புகைப்படங்களில் அதிக கவனம் ஈர்த்தது கரீனா நெபுலாவின் புகைப்படம் ஆகும். நெபுலா என்பது துகள்கள், நட்சத்திரங்கள், வாயுக்கள் ஆகியவற்றின் திரளாகும்.
பற்பல பால்வெளி மண்டலங்களின் தொகுப்பான எஸ்எம்ஏசி 0723லிருந்து வரும் வெளிச்சம் பூமியை அடைய பல பில்லியன் ஆண்டுகள் பிடித்துள்ளது.
290 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள ஸ்டெபன்ஸ் குவிண்டெட், ஐந்து பேரண்டங்களின் தொகுப்பாகும். இவற்றில் நான்கு, நடராஜரின் நடனத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒன்றுக்கு ஒன்று நெருங்கும் பிரபஞ்ச நடனத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சதர்ன் ரிங், அதாவது தெற்கு வட்டம் எனும் நெபுலாவின் புகைப் படங்களும் வெளியிடப்பட்டன. இதன் நடுவில் உள்ள நட்சத்திரம் இறந்து வருவதாக நாசா கூறியது.
இதுவரை விண்வெளி ஆய்வுக்கு ஹபல் தொலைநோக்கியை பயன்படுத்தி வந்த நாசா, 10 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது.
13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பேரண்டத்தில் நிகழ்ந்தவற்றைக் கண்டுபிடிக்க வல்லது இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. அடுத்த 20 ஆண்டு களுக்கு இதுவே பூமியின் மிக முக்கியமான விண்வெளி ஆய்வுத் தொலைநோக்கியாக இருக்கும்.

