ஒருவரின் வயதைவிட வாழ்க்கைமுறையே அவருக்கு மறதிநோய் வரும் அபாயத்தைக் கணிக்க கூடுதல் முக்கியமான அம்சமாக இருக்கலாம். கனடாவின் டொரொன்டோ பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய பேக்கிரெஸ்ட் சுகாதாரக் கல்வி நிலையம் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
"ஒருவரின் மூளைச் செயல்பாட்டைக் கணிக்க அவரின் வயதைவிட வாழ்க்கைமுறை சார்ந்த அம்சங்கள் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கலாம் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இது பெரும் நற்செய்தி. காரணம், நீரிழிவு நோயைச் சமாளிப்பது, செவி சாய்க்கும் ஆற்றல் குறைந்துள்ளதா என்பதை அறிந்துகொள்வது, புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட உதவியை நாடுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் வாழ்க்கைமுறை அம்சங்களில் மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்," என்று 'ஆர்ஆர்ஐ' எனும் பேக்கிரெஸ்ட் ரொட்மன் ஆய்வு நிலையத்தில் பணியாற்றும் டாக்டர் அனலிசா லாபுளூம் கூறியுள்ளார்.
மறதிநோய் ஏற்படும் அபாயத்தில் வாழ்க்கைமுறைக்கு எத்தகைய பங்குள்ளது என்பதை அறியும் முதல் சில ஆய்வுகளில் இதுவும் ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பொதுவாக இத்தகைய ஆய்வுகள் நடுத்தர வயதினர், அவர்களைவிடவும் வயதில் மூத்தவர்கள் ஆகியோரைக் கொண்டுதான் நடத்தப்படும். ஆனால் இந்த ஆய்வில் 18 வயதானவர்களின் தகவல்களும் கருத்தில்கொள்ளப்பட்டன. மறதிநோயை ஏற்படுத்தக்கூடிய வாழ்க்கைமுறை அம்சங்களால் எல்லா வயதுப் பிரிவினரிடையேயும் மூளை வளர்ச்சி எதிர்மறையாகப் பாதிப்படையலாம் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது முக்கியமானது. காரணம், மறதிநோயை ஏற்படுத்தக்கூடிய அத்தகைய அம்சங்களை முடிந்தவரை இளம் வயதிலேயே அடையாளம் காணலாம், காணவேண்டும்," என்று பேக்கிரெஸ்ட் ரொட்மன் ஆய்வு நிலையத்தில் மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றும் டாக்டர் நிக்கோல் ஆண்டர்சன் குறிப்பிட்டார். அவர் இந்த ஆய்வின் மூத்த ஆசிரியர்களில் ஒருவரும் ஆவார்.
18லிருந்து 89 வயதுக்கு உள்பட்ட 22,117 பேரின் தகவல்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் இடம்பெற்ற சோதனைகளின் மூலம் பங்கேற்பாளர்களின் நினைவாற்றல், கவனம் ஆகிய அம்சங்கள் கண்காணிக்கப்பட்டன. அவற்றில் மறதிநோயை ஏற்படுத்தக்கூடிய எட்டு வாழ்க்கைமுறை அம்சங்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது ஆராயப்பட்டது.
அதிகம் கல்வி பயிலாதது, காது கேட்காமல் இருப்பது, பதற்றத்தை உண்டாக்கும் மூளைக் காயம், போதைப்பொருள் அல்லது மதுப் பழக்கத்துக்கு அடிமையாவது, உயர் ரத்த அழுத்தம், புகைபிடிப்பது, நீரிழிவு நோய், மனச்சோர்வு ஆகியவை அந்த எட்டு அம்சங்கள். இவை அனைத்தும் ஒருவர் மாற்றங்களைச் செய்துகொண்டு கையாளக்கூடியவையே.
ஒவ்வோர் அம்சத்தாலும் ஒருவர் அதிபட்சமாக மூவாண்டுகள் மூப்படைவதற்குச் சமமாக மூளைச் செயல்பாடு குறையக்கூடும் என்பது ஆய்வில் தெரியவந்தது. அப்படியென்றால் எட்டில் மூன்று அம்சங்களை எதிர்கொள்பவரின் மூளைச் செயல்பாடு அவர் ஒன்பது ஆண்டுகள் முதுமையடைவதற்குச் சமமாகக் குறையும்.
இதன் தொடர்பில் கூடுதல் வயதானோருக்குப் பாதிப்பு அதிகம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. வயதில் மூத்தவர்கள் கூடுதல் அம்சங்களால் பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
"சுருக்கமாகச் சொன்னால் மூளைச் செயல்பாடு குறைவது, மறதிநோய்க்கு ஆளாவது ஆகியவற்றைத் தவிர்க்கும் ஆற்றல் அவரவரிடம் இருக்கிறது, என்பதை எங்களின் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது," என்று டாக்டர் லாபுளூம் குறிப்பிட்டார்.