உலகளவில் கடந்த சில மாதங்களாக பல நாடுகள் தங்களின் எல்லைகளை மீண்டும் சுற்றுப்பயணிகளுக்குத் திறந்துவிட்டு வருகின்றன. அவ்வாறு செய்யாமல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தாமல் இருந்த நாடுகளில் ஒன்று சுற்றுப் பயணிகளிடையே பிரபலமாக இருக்கும் இந்தியாவின் அண்டை நாடான பூட்டான்.
இரண்டரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதியன்று பூட்டான் எல்லைகளைத் திறக்கப்போவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இது நிச்சயமாக இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தியாக இருக்கும்.
எனினும், இதில் ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது. சுற்றுப்பயணிகள் நீடித்த நிலைத்தன்மை மேம்பாட்டு வரியாக பூட்டானில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 200 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தவேண்டும்.
கடந்த சுமார் 30 ஆண்டுகளாக இந்தத் தொகை 65 டாலராக மட்டுமே இருந்தது.
நீடித்த நிலைத்தன்மை அம்சத்தைக் கடைப்பிடித்தவாறு சுற்றுப்பயணத் துறை மீண்டு வருவதற்கு உதவ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
"கரிம வெளியீட்டைக் குறைவாக வைத்தபடி பொருளியல் ரீதியாக மட்டுமின்றி சமூக அளவிலும் பூட்டானைப் பலனடையச் செய்யும் வகையில் சுற்றுப்பயணத் துறையை எவ்வாறு சீரமைக்கலாம் என்பதை மறுபரிசீலனை செய்ய கொவிட்-19 நமக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது," என்று பூட்டானின் வெளியுறவு அமைச்சரும் அந்நாட்டின் சுற்றுப்பயணத் துறை அமைப்பின் தலைவருமான டாக்டர் டாண்டி டொர்ஜி கூறினார்.
இயற்கை எழில் கொஞ்சும் பூட்டானின் பொருளியல் சுற்றுப்பயணத் துறையைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்கு முன்பு 2019ஆம் ஆண்டில் சுமார் 315,000 சுற்றுப்பயணிகள் பூட்டானுக்குச் சென்றனர். அதன் மூலம் அந்நாட்டின் சுற்றுப்பயணத் துறை 225 மில்லியன் டாலர் தொகையை ஈட்டியது.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பூட்டானில் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

