இந்தக் காலத்தில் நமது மதிப்பை உணர்ந்துகொள்வதன் முக்கியத்துவம் அடிக்கடி வலியுறுத்தப்படுவதுண்டு. சுய மரியாதைக்கும் தனக்கென ஓர் அடையாளத்தை நிலைநாட்டவும் அது தேவையான ஒன்று என்பது பல வேளைகளில் எடுத்துச் சொல்லப்படுகிறது.
நம்மை நாமே ஏற்றுக்கொள்வது, 'செல்ஃப் லவ்' எனப்படும் சுய அன்பு செலுத்துவது போன்ற தன்முனைப்பு சித்தாந்தங்களுக்கு அடித்தளமாக அமைவது சுய மதிப்பு.
வாழ்க்கையில் பல பிரச்சினைகள் நமது மதிப்பை உணராமல் இருக்கும்போதுதான் எழுகின்றன. தேவையின்றித் தம்மிடமே குறை கண்டுபிடிப்பது, தன்னைத்தானே தாழ்த்திக்கொள்வது அல்லது தாழ்வாகப் பேசுவது போன்ற செயல்கள் இதன் பின்விளைவுகளில் சில.
உதாரணமாக, இத்தகையோர் பிறரை மதிக்காமல் அவர்களை மனத்தளவில் காயப்படுத்தும் சுயநலவாதிகளுடன் நெருக்கமாக இருக்க வாய்ப்புண்டு. தன்னைப் பற்றிய எண்ணம் சரியாக இல்லாததால் அப்படிப்பட்டவர்களுடன்தான் தங்களால் உறவு வைத்துக்கொள்ளமுடியும் என்ற தாழ்வு மனப்பான்மை இதற்குக் காரணம்.
உறவுகள் மட்டுமல்ல, தங்களைத் தாழ்வாக மதிப்படவைக்கும் பல்வேறு சூழல்களில் இத்தகையோர் சிக்கியிருக்கலாம்.
இளம் வயதில் போதுமான அன்பு கிடைக்காதது, வளரும் பருவத்தில் தங்களைத் தாழ்வாக நினைக்க வைப்போருடன் நெருக்கமாக இருந்தது போன்ற காரணங்களால் சிலர் இந்த அவல நிலைக்கு ஆளாகலாம். கொடுமை என்னவென்றால் தங்களையே தாழ்த்திக்கொள்கிறோம் என்ற விழிப்புணர்வும் இவர்களுக்குப் பல வேளைகளில் இருக்காது. தெரியும்போது ஆண்டுகள் வீணாகியிருக்கலாம்.
இப்படிப்பட்ட மனப்பான்மை வலைக்குள் சிக்கியிருப்பதை அறிந்துகொள்ள சில அறிகுறிகள் உள்ளன.
பிறருடன் இருக்கும்போது ஒருவகை அசௌகரியம் ஏற்படுவது, புதிய இடங்கள், உறவுகள், சூழல்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது, அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்திசெய்யாத துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் உறவுகளில் தொடர்ந்து இருப்பது, பிறரிடம் உத்தரவாதம் நாடுவது, பிறரை மகிழ்விக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, பிறர் பாராட்டினால்கூட அதை ஏற்றுக்கொள்ள முடியாதது, பிறர் தன்னைத் தவறாக எண்ணிவிடுவரோ என்ற கவலையில் ஊறிப்போவது உள்ளிட்டவை அறிகுறிகளில் சில. இப்படிப்பட்ட ஒருவராக நீங்கள் இருந்தால் கவலை வேண்டாம். நீங்கள் உங்களை மீட்டெடுக்கலாம்.
மனக்கவலையை அள்ளித் தரும் மோசமான உறவுகளிலிருந்து விலகிவிடுங்கள். இது சவாலானது. நமது மதிப்பை உணராதபோது இருப்பதும் போய்விடுமோ என்ற அச்சம்தான் இதற்குக் காரணம். ஆனால் உங்கள் தேவைகளுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கும்போது அச்சம் மறையத் தொடங்கும்.
உங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். சுய அன்பு செலுத்தி உங்களின் மதிப்பை உணருங்கள். நீங்களும் குறை நிறை உள்ள ஒரு மனிதர்தான் என்பதை உணர்ந்து உங்கள் மீதுள்ள மதிப்பிற்கு மெருகூட்டுங்கள்.
இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டால் பல காலமாக நீங்கள் சந்தித்த பிரச்சினைகள் மாயமாக மறைவதை நீங்கள் பார்க்கலாம். யோசித்துப் பார்த்தால், இதைவிட என்ன வேண்டும் நமக்கு...
- psychcentral.com என்ற மனநலம் தொடர்பான இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்கம் இது.

