அமெரிக்காவின் டெக்சஸ் சவுத்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், வெவ்வேறு கொவிட்-19 கிருமிவகைகளை ஏறத்தாழ நான்கு மணிநேரத்தில் கண்டுபிடிக்கும் புதிய பரிசோதனையை உருவாக்கியுள்ளனர்.
விஞ்ஞானிகள் அதற்கு 'கொவேர்ஸ்கான்' என்று பெயரிட்டுள்ளனர். எந்த கொவிட்-19 கிருமி வகை தொற்றியுள்ளது என்பதைக் கண்டுபிடித்து அதற்கேற்ப விரைவாக சிகிச்சை அளிக்க இந்த புதிய பரிசோதனை முறை உதவும் என்று நம்புவதாக அவர்கள் கூறினர்.
அத்துடன் எந்தெந்தக் கிருமிகள் எந்தெந்த சமூகங்களில் பரவுகின்றன என்பதைக் கண்காணிக்கவும் புதிய கிருமிவகைகளைக் கண்டறியவும் இந்தப் பரிசோதனை உதவும் என்றும் கூறப்பட்டது.
தற்போது ஒருவரது மரபணுக்களை வரிசைப் படுத்தி அவருக்கு எந்தவகை கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளது என்று கண்டறியப்படுகிறது. ஒருவரின் ஒட்டுமொத்த மரபணு வரிசையும் அதில் ஆராயப்படும். இதற்கு அதிகச் செலவும் காலமும் எடுக்கும்.
ஆனால் கொவேர்ஸ்கான் பரிசோதனையில் சார்ஸ்-சிஓவி-2 மரபணுவின் வரிசையில் எட்டு முக்கிய இடங்கள் கவனிக்கப்படும்.
ஒவ்வொரு கிருமி வகையும் இந்த எட்டு இடங்களில் வேறுபட்டிருக்கும். இதைக் கொண்டு கிருமி வகையை அடையாளம் காண முடியும்.
'கிளினிக்கல் கெமிஸ்ட்ரி' எனப்படும் மருந்தியல் வேதியல் ஆய்விதழில் புதிய பரிசோதனை வெளியிடப்பட்டது. ஆய்வு 2021 ஜனவரியில் தொடங்கப்பட்டது.
கொவிட்-19 பரிசோதனைக்காக மூக்கிலிருந்து எடுக்கப்பட்ட 4,000 மாதிரிகளை டெக்சஸ் சவுத்வெஸ்டர்ன் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அவற்றின் முழு மரபணு வரிசையையும் கொவேர்ஸ்கேன் முறைப்படியிலான ஆய்வையும் அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
முழு மரபணு வரிசை காட்டிய கிருமி வகையும் கொவேர்ஸ்கேன் ஆய்வு காட்டிய கிருமி வகையும் ஒத்துப் போயின. மேலும், புதிதாகத் தோன்றக்கூடிய கிருமிவகைகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் இந்தப் புதிய பரிசோதனை முறைக்கு உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறினர்.

