எண்பதுகள், தொண்ணூறுகளில் பரவலாக இருந்த விஎச்எஸ் வீடியோ நாடாக்களை (படம்), குறிப்பாக அக்காலகட்டத்தில் புகழ்பெற்றிருந்த ஆங்கிலப் படங்கள் கொண்டவற்றை வைத்திருப்பவர்கள் நல்ல லாபம் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மைய மாதங்களில் நடந்துவரும் பழைய பொருள்களுக்கான ஏலவிற்பனைகளில், அவ்வாறான வீடியோ நாடாக்கள் நல்ல விலைக்கு விற்கப்பட்டன.
கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த ஹெரிட்டேஜ் ஆக்ஷன்ஸ் ஏலவிற்பனையில் பேக் டு தி ஃபியூச்சர் ஆங்கிலத் திரைப்படம் 75,000 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. ஜாஸ் (Jaws) திரைப்படத்தின் பிரதி 32,500 டாலருக்கு விற்கப்பட்டது.
சில வீடியோக்கள் நூறாயிரம், மில்லியன் டாலரைத் தாண்டக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் வீடியோ நாடாவை பெரிய விலைக்கு விற்பதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவை முதல் பதிப்பாக இருக்க வேண்டும். மேலும் வீடியோ நாடாக்கள் திறக்கப்பட்டிருக்ககூாடது.
வீடியோ நாடாக்களைச் சேகரிப்பவர்கள் பல்லாண்டுகளாக இருந்தபோதும் அவை பெரும்பாலும் இதுவரை அதிக விலைக்கு விற்கப்பட்டதில்லை.
ஆனால் பழைய பொருள்களைச் சேகரிப்பதில் ஆர்வம் கூடியுள்ளதால், இவற்றின் விலை அண்மைய மாதங்களில் அதிகரித்துள்ளதாக வீடியோ நாடாக்களைச் சேகரிக்கபவர்களுக்கான இணையத்தளத்தை நடத்தும் பிலிப் பேக்கர் கூறினார்.
அதனால் வீடியோ நாடாக்கள் முதலீட்டுக்கான நல்ல வாய்ப்பாகவும் உருவெடுத்துள்ளன.

