முதுகுவலி பலருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சினையாக மாறிவிட்டது. சிங்கப்பூரில் உள்ள பெரியவர்களில் 80 விழுக்காட்டினருக்கு கீழ் முதுகு வலி இருப்பதாக 2010ல் நடத்தப்பட்ட சிங்கப்பூர் தேசிய சுகாதார கருத்தாய்வு கூறியுள்ளது.
இலேசான வலியிலிருந்து உயிர்போகும் வலி வரை, முதுகுவலியில் பல நிலைகள் உண்டு. நாம் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கக் கூடிய முதுகு வலி பற்றி விழிப்புடன் இருப்பது அவசியம். முன் யோசனை இல்லாத சில செயல்களால் நமக்குத் தெரியாமலேயே முதுகுவலி மோசமாகக்கூடும்.
நேராக நிமிர்ந்து அமராதது
நேராக நிமிர்ந்து உட்கார் என்று நம்மை வீட்டுப் பெரியவர்கள் அதட்டியதற்குக் காரணம் உள்ளது. முதுகைக் கூனிக்கொண்டு அமர்வது முதுகு வலிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று.
கூனிக்கொண்டு உட்கார்வதால் கீழ் முதுகில் உள்ள வட்டுகளில் அழுத்தம் ஏற்படுகிறது. முதுகுத் தண்டின் வளைவு மாறுவதால் வலியும் முதுகுப் பிடிப்பும் ஏற்படக்கூடும் என்று அமெரிக்க விளையாட்டுத் துறை மருத்துவர் ஃபெபின் மெலெபுரா கூறினார்.
கூனிக்கொண்டு கணினியில் வேலைசெய்வதால் காலப்போக்கில் முதுகுத் தண்டின் வளைவு மாறக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பாக சோஃபாவில் அமர்ந்து வேலை செய்வது முதுகுக்கு நல்லதல்ல என்று முதுகுத் தண்டு மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கைபேசியே கதி
கீழே குனிந்தபடி கைபேசியைப் (மடி கணினி அல்லது புத்தகமாகக் கூட இருக்கலாம்) பார்ப்பதால், மேல் முதுகு வலியும் கழுத்து வலியும் ஏற்படக்கூடும் என்றார் டாலஸ் நகரத்தைச் சேர்ந்த தண்டெலும்பு நோய் மருத்துவர் டிமெட்ரிஸ் எலியா. தலை மேலும் குனியாமல் இருப்பதற்காக முதுகுத் தண்டும் மேல் முதுகு தசைகளும் அழுந்தி வேலை செய்வதே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.
முதுகைத் தாங்கிப்பிடிக்காத நாற்காலிகள்
முதுகுக்கு முட்டுக்கொடுத்து சரியாகத் தாங்கிப் பிடிக்காத, நாற்காலிகளில் நீண்டநேரம் அமர்வது முதுகுவலிக்கு பெரும் காரணமாக உள்ளது. 'எர்கனோமிக்' நாற்காலிகள், ஃபுட்ரெஸ்ட் எனப்படும் கால்தாங்கிகள், விசைப்பலகையைப் பயன்படுத்தும்போது மணிக்கட்டை வைக்கும் தாங்கி, மேல் எழும் மேசைகள் போன்றவை இன்று பிரபலமாகிவிட்டன. இவற்றில் முதலீடு செய்யலாம். ஆனால் கண் இருக்கும் உயரத்தில் கணினித் திரையை வைத்திருப்பதும் அடிக்கடி நிமிர்ந்து நிற்பதும்கூட முதுகுவலியைத் தடுக்க உதவும்.
அடிக்கடி எழுந்து நிற்காதது
இன்றைய சூழலில் அலுவலக ஊழியர்கள் பலரும் மடிகணினியைப் பயன் படுத்த வேண்டியுள்ளது. பல மணிநேரம் அவர்கள் விசைப்பலகையில் தட்டச்சு செய்கின்றனர். இதனால் முதுகுத் தண்டைச் சுற்றியுள்ள தசைகள் சோர்வடைகின்றன.
இதுவும் முதுகுவலி ஏற்பட ஒரு காரணம் என்று நியூ ஜர்சியைச் சேர்ந்த உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் ஸ்ரீதர் யலமஞ்சிலி குறிப்பிட்டார்.
அடிக்கடி சிறிது நேரத்துக்கு நின்று முதுகு, கழுத்து, நெஞ்சுப்பகுதி தசைகளை விரியச் செய்யும் பயிற்சிகளைச் செய்வது நல்லது என்றார் ஸ்ரீதர்.
போதிய நடை இல்லையென்றால்
மனித முதுகுத்தண்டு நடப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது. ஏழு எட்டு மணி நேரம் தூங்குகிறோம். மேலும் எட்டு ஒன்பது மணிநேரம் உட்கார்ந்து வேலை செய்கிறோம். நடக்காமல் இருப்பதால் முதுகுவலி ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை என்று லாஸ் ஏஞ்சலிஸ் சீடார்ஸ்-சினாய் முதுகுத்தண்டு சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த நிபுணர் டாக்டர் நீல் ஆனந்த் குறிப்பிட்டார்.
நடப்பது முதுகுத் தண்டுக்கும் அதைச் சுற்றியுள்ள தசைகளுக்கும் வலு தரும். குறிப்பாக அதிகம் அமர்ந்தபடி இருப்பவர்கள் ஒரு நாளில் குறைந்தது 30 நிமிடம் நடந்தால் முதுகைப் பாதுகாக்க முடியும் என்பது டாக்டர் நீல் ஆனந்தின் ஆலோசனை.
இழுக்காமல் இறுக்கமாகும் தசைகள்
முதுகில் உள்ள தசைகளை இழுக்கும் பயிற்சிகளை செய்யாமல் இருப்பதாலும் முதுகுவலி ஏற்படக்கூடும். முதுகுவலியையும் தசைப்பிடிப்பையும் தவிர்க்க தினமும் முதுகுத் தசைகளை இழுத்து இறுக்கத்தைக் குறைக்கும் பயிற்சிகளைச் செய்வது முக்கியம்.
தவறான தலையணை
தூங்கும்போது முதுகைத் தாங்கும் சரியான தலையணை இருப்பது முக்கியம் என்றார் டாக்டர் நீல் ஆனந்த். நாம் படுத்திருக்கும் விதத்துக்கு ஏற்றவாறு மாறும், கழுத்தை மெத்தைக்கு இணையாக நேரே வைத்திருக்க உதவும் தலையணைகள் அவற்றில் அடங்கும்.

