கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் தலைதூக்கியதிலிருந்து வீட்டில் இருந்தபடி வேலை செய்யும் முறையை உலகின் பல நிறுவனங்கள் பின்பற்றியுள்ளன. அதையும் தாண்டி ஊழியர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப உலகின் எந்த மூலையிலிருந்தும் மெய்நிகரில் வேலை செய்வதற்கான வழியும் அண்மைக் காலமாகப் பிறந்துள்ளது.
இதற்கு வகைசெய்யும் 'டிஜிட்டல் நோமெட் விசா' எனும் மின்னிலக்க நாடோடி விசாவை வழங்கும் நாடுகளில் ஒன்று கோஸ்டா ரிக்கா. இது, வட அமெரிக்க கண்டத்தின் ஒரு பகுதியான மத்திய அமெரிக்காவில் இருக்கிறது.
இந்த விசாவிற்குத் தகுதிபெற ஓர் ஊழியர் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்யவேண்டும், அவரின் மாதச் சம்பளம் குறைந்தபட்சம் 3,000 டாலராக இருக்கவேண்டும். அவர் தனது குடும்பத்தாரையும் இந்நாட்டிற்கு அழைத்துவர விரும்பினால் குறைந்தபட்ச சம்பளம் 5,000ஆக உயரும்.
இந்த நிபந்தனைகளைப் பூர்த்திசெய்தால் ஒருவர் ஓராண்டுக்கு எழில் கொஞ்சும் கோஸ்டா ரிக்காவில் வாழ்ந்தபடி வேலை செய்யலாம். இந்த ஏற்பாட்டை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கவும் முடியும்.
இந்தோனீசியா, எஸ்டோனியா, ஜியார்ஜியா உள்ளிட்ட நாடுகளும் இந்த விசாவை வழங்குகின்றன. ஒருகாலத்தில் பலருக்குக் கனவாக மட்டுமே இருந்த இந்த வசதி கொள்ளைநோய்ப் பரவலால் யதார்த்தத்திற்கு அறிமுகமாகியுள்ளது.

