அம்ரிதா கௌர்
அடிவயிற்றுப்பகுதியில் திடீரென வலி ஏற்படுகிறதா? கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டாம். அவ்வலி பித்தக்கல்லால் ஏற்படுவதாக இருக்கலாம்.
சிங்கப்பூரில் பித்தக்கல் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அண்மைய ஆண்டுகளில் அந்த பாதிப்பு 10 முதல் 15 விழுக்காடு கூடியுள்ளது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்ட மருத்துவர்கள் மூவர் தெரிவித்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டைவிட 2021ஆம் ஆண்டில் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் பித்தப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் 50% கூடியது.
மக்கள்தொகைப் பெருக்கம், மூப்படையும் மக்கள்தொகை, ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, கொழுப்புச்சத்து நிறைந்த உணவை அதிகம் உட்கொள்வது, போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவை பித்தக்கல் பாதிப்பு அதிகரிப்பிற்கான காரணங்களாக இருக்கலாம் என்று அம்மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் தங் யோங்சியான் கூறினார்.
பொதுவாக, செரிமானத்திற்கு உதவும் பித்தநீரில் அதிகப்படியான கொழுப்பு இருக்கும்போது பித்தப்பையில் கல் உருவாகும். அந்த மிகைக்கொழுப்பே கற்களாக மாறும். அக்கற்கள் ஒரு சிறு துகள் அளவிலும் இருக்கலாம்; கோல்ஃப் பந்து போன்று பெரிதாகவும் இருக்கலாம்.
பித்தக்கற்கள் உருவாகும்போது பெரும்பாலும் அறிகுறி தெரியாது. அதற்கு சிகிச்சையும் தேவைப்படாது. ஆனால், அக்கற்கள் பித்தநீர் நாளங்களை அடைத்துக்கொண்டால், திடீரென வலியை ஏற்படுத்தலாம். அப்போது மருத்துவ உதவி தேவைப்படும்.
பித்தப்பையில் கற்கள் உருவாவது அடிவயிற்றில் வலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, மஞ்சள் காமாலை, பசியின்மை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
பித்தக்கற்கள், சிறுநீரகக் கற்களில் இருந்து வேறுபட்டவை. கால்சியம் ஆக்சலேட் என்ற வேதிப்பொருளும் யூரிக் அமிலமும் சேர்ந்து உருவாகும் சிறு படிகங்களே சிறுநீரகக் கற்கள்.
பொதுவாக, 40 வயதிற்கு மேற்பட்டவர்களே பித்தக்கற்களால் பாதிக்கப்படலாம் என்றாலும் 20, 30 வயதுகளிலும் அந்நோயாளிகளைக் கண்டுள்ளதாக டாக்டர் டான் சொன்னார்.
"ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையால் அவர்கள் அதிக உடல் எடையுடன் இருக்கலாம். பெரும்பாலும் அவர்களது உடலில் அதிகக் கொழுப்பு இருக்கும். அது பித்தக்கல் உருவாக வழிவகுக்கும்," என்றார் அவர்.
பித்தக்கல் நோயாளியான திருவாட்டி ஷேரன் டான், 36, 1.57 மீட்டர் உயரமும் 68 கிலோ எடையும் கொண்டவர். இது அதிக உடல் எடையாகக் கருதப்படுகிறது.
பித்தக்கல் இருப்பது கண்டறியப்பட்டபின் அவர் பொரித்த உணவையும் பதப்படுத்தப்பட்ட உணவையும் தவிர்த்தார். இப்போது, அதிகப் பழங்களும் காய்கறிகளும் இருக்கும் வகையில் சரிவிகித உணவை அவர் உட்கொள்கிறார்.
பெரும்பாலான பித்தக்கற்கள் மீயொலி (ultrasound) பரிசோதனை மூலமாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன. பித்தக்கல் பாதிப்பு அறிகுறி இருப்போர் பெரும்பாலும் பித்தப்பை நீக்க அறுவை சிகிச்சையை நாடுவதாக கிளனீகல்ஸ் மருத்துவமனையின் இரைப்பைக் குடலியல் மருத்துவர் அமிதாப் மோங்கா கூறினார்.
பித்தப்பை இல்லாமல் ஒருவர் உயிர்வாழ முடியும். அத்தகைய நிலையில், கல்லீரல் பித்தநீரைச் சுரந்து, நேரடியாக சிறுகுடலுக்குள் தள்ளிவிடும்.
நார்ச்சத்து மிகுந்த, மாவுச்சத்து, சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு குறைந்த உணவுகளை உட்கொள்வதாலும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்வதாலும் பித்தக்கல் உருவாகாமல் தடுக்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

