'ஒன்றிணைந்த சிங்கப்பூர்' இயக்கத்தின் மூன்றாமாண்டு நிறைவுவிழாவில் திரையிடப்பட்ட நான்கு குறும்படங்களுள் திருவாட்டி விஷாலி பஞ்ச், 37, இயக்கிய 'நெவர் டூ லேட்' படமும் ஒன்று.
ஊடகத்துறையில் 20 ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள திருவாட்டி விஷாலிக்கு, அவர் இயக்கிய முதல் குறும்படமே பொருள் பொதிந்த நடவடிக்கைக்காக அமைந்ததில் பெருமகிழ்ச்சி.
குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு உதவ முனையும் கர்ணன் என்ற மேலாளரை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது 'நெவர் டூ லேட்' குறும்படம்.
மனிதவள அமைச்சின் முயற்சிகளை எடுத்துக்காட்டும் வகையிலான குறும்படத்தை இயக்கும் பொறுப்பு தமது திரைப்படக் குழுவிடம் வழங்கப்பட்டதை அடுத்து, முதலில் அவ்வமைச்சின்கீழ் வரும் திட்டங்களைப் பற்றி அக்குழு ஆராய்ந்தது.
அவற்றுள், குறைந்த வருமான ஊழியர்களுக்கு உதவிவரும் 'உளச்சான்று நிறுவனங்கள் (Organisations of Conscience)' எனும் திட்டம் உன்னதமான முயற்சியாக அவர்களுக்குத் தோன்றியது. அதனைத் தொடர்ந்து, அத்திட்டத்தின் தலைவர் திரு கார்த்திகேயன் ராமகிருஷ்ணனுடன் உரையாடிய பின்னர், தம் கதாசிரியருடன் சேர்ந்து குறும்படத்திற்கான கதையை எழுதத் தொடங்கினார் திருவாட்டி விஷாலி.
சிறுவயது அனுபவங்களே ஒருவரின் குணநலன்களைத் தீர்மானிக்கின்றன என்று நம்பும் திருவாட்டி விஷாலி, குறைந்த வருமானம் ஈட்டும் ஒருவரின் மகன், தானும் தன் தந்தையும் பட்ட துன்பங்களைப் பிறர் அனுபவிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் எடுக்கும் முயற்சிகளைக் கதைக்கருவாக தேர்வு செய்தார்.
தெமாசெக் கடை வீடு கட்டடத்தில் நேற்று முன்தினம் திரையிடப்பட்ட 'நெவர் டூ லேட்' குறும்படத்தில் திறமையான நடிகர்கள் நடித்திருந்தனர். அத்துடன், உணர்ச்சிமிகு பின்னணி இசையும் சுவாரசியமான பின்னோக்கு உத்தியும் பயன்படுத்தப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, கடந்த மூன்று ஆண்டுகளாக 'ஒன்றிணைந்த சிங்கப்பூர்' இயக்கத்திற்காகப் பங்காற்றி வருவோருக்கும் தொண்டூழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் சென்ற மாதம் அறிமுகப்படுத்திய 'முன்னேறும் சிங்கப்பூர்' இயக்கத்தில் இணைந்து, முன்வந்து பணி ஆற்றும்படி இக்குறும்படங்கள் சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கும் என்றும் குமாரி இந்திராணி ராஜா நம்பிக்கை தெரிவித்தார்.

