வயது ஏற ஏற மறதியும் அதிகமாகும் என்பது நம்மில் பலரும் நம்பும் ஒன்று. ஆனால் நிறைவாற்றல், மூளை தொடர்பான உலகின் முக்கிய நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ரிச்சர்ட் ரெஸ்டக் மறதியைத் தடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவமனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ, சுகாதாரக் கல்லூரியில் அவர் பேராசிரியராகப் பணிபுரிகிறார். மூளை பற்றி 20க்கும் அதிகமான நூல்களை டாக்டர் ரெஸ்டக் எழுதியுள்ளார்.
தமது அண்மைய நூலான 'தி கம்ப்லீட் கைட் டு மெமரி: தி சயன்ஸ் ஆஃப் ஸ்ட்ரெங்க்தனிங் யுவர் மைண்ட்' எனும் நூலில் மறதியைத் தடுக்க பல வழிகளை அவர் விவரித்துள்ளார்.
நினைவாற்றலில் நீண்டகால நினைவுகள், சற்று முன்னர் நடந்ததை நினைவுகொள்தல் உள்ளிட்ட பல வகைகள் உண்டு. அன்றாட நினைவாற்றல்தான் இந்த வகைகளில் முக்கியமானது என்றும் இந்த நினைவாற்றலைப் பாதுகாக்க தினமும் பயிற்சிகள் தேவை என்றும் டாக்டர் ரெஸ்டக் நூலில் கூறினார்.
நினைவாற்றலைப் பாதுக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிகளில் ஒன்று, கூடுதல் கவனம் கொள்வதாகும். நினைவாற்றல் குறைவதால் மட்டும் மறதி ஏற் படுவதில்லை. ஒருவர் சொல்வதையோ ஒரு நிகழ்வையோ கூர்ந்து கவனிக்காததாலும் அந்த நினைவு மூளையில் சரியாகப் பதியாததாலும் மறதி ஏற்படக்கூடும்.
பெயர் போன்றவற்றை நினைவில் வைத்துக்கொள்ள அதனுடன் தொடர்புள்ள சில படங்களை கற்பனை செய்துகொள்ளுமாறு டாக்டர் ரெஸ்டக் பரிந்துரைத்தார். உதாரணத்துக்கு மன்னன் என்ற பெயர்கொண்ட மருத்துவரின் பெயர் நினைவில் இருக்கவேண்டும் என்றால் வெள்ளை அங்கி போட்டு கையில் செங்கோல் இருப்பது போல கற்பனை செய்துகொள்ளலாம்.
அடுத்து, அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும்போது நினைவாற்றலைப் பெருக்கும் பயிற்சிகளைச் செய்யலாம். பேரங்காடியில் வாங்க வேண்டிய பொருள்களையும் சமையல் குறிப்புகளையும் மனப்பாடம் செய்வதும் பயிற்சிதான் என்றார் டாக்டர் ரெஸ்டக்.
அடிக்கடி சமைத்தால் அன்றாட நினைவாற்றல் கூடும் என்று அவர் குறிப்பிட்டார். அல்லது வாகனம் ஓட்டுபவர்கள் அவ்வப்போது 'ஜிபிஎஸ்' கருவிகளைப் பயன்படுத்தாமல் சொந்தமாக வழியைக் கண்டுபிடித்துச் செல்லலாம்.
மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகளும் மறதியைக் குறைக்க உதவலாம். சதுரங்கம் போன்றவற்றைத் தவிர நினைவாற்றலை மேம் படுத்தும் எளிய விளையாட்டுகளில் ஈடுபடலாம். 20 கேள்விகள் எனும் விளையாட்டு அவற்றில் ஒன்று.
ஒருவர் மனதில் ஓர் இடத்தையோ பொருளையோ நினைப்பார். மற்றவர் இருபது கேள்விகள் கேட்டு அதைக் கண்டுபிடிக்க வேண்டும். இவர் ஆமாம் இல்லை என்று மட்டும் பதில் கூறவேண்டும்.
நிறைய நாவல்களைப் படிப்பதும் நினைவாற்றலுக்கு உதவும் என்று டாக்டர் ரெஸ்டென் சொன்னார். நாவலின் 111 பக்கத்தைப் படிக்கும்போது மூன்றாவது பக்கத்தில் கதாபாத்திரங்கள் என்ன செய் தனர் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். இது மூளைக்கு கூடுதல் வேலை. அதனால் புனைவில்லாத படைப்புகளைவிட புனைவு நினைவாற்றலுக்கு உதவும்.
மேலும் நினைவுகொள்ள வேண் டிய எல்லாவற்றையும் கைப்பேசியில் வைக்க வேண்டாம் என்றும் ஒரு செயலில் ஈடுபடும்போது கைப் பேசி போன்ற கருவிகளில் கவனத்தைச் சிதறவிட வேண்டாம் என்றும் டாக்டர் ரெஸ்டக் வலியுறுத்தினார்.

