தேசிய தின அணிவகுப்பு, வாணவேடிக்கைகளைக் காண்பது, குடும்பத்தாருடன் நாளைக் கழிப்பது, தீவின் முக்கிய இடங் களைச் சுற்றிப் பார்ப்பது என்று தேசிய தினத்தைக் கொண்டாட பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் 'நன்மை செய்வது'.
தேசிய தினத்தை முன்னிட்டு உதவி தேவைப்படும் சமூகங் களுக்கு ஆதரவளிக்க இந்த 'நன்மை செய்வது' இயக்கம் சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கிறது. ஜூலை 16ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரையிலான 22 நாள்களில் பல்வேறு தொண்டூழியப் பணிகளில் பொதுமக்கள் ஈடுபடுலாம். அதற்குப் பிறகும் தொண்டூழியத்தைத் தொடரலாம்.
நன்மை செய்வது இயக்கத்தை அதிபர் ஹலிமா யாக்கோப் இஸ்தானாவில் ஞாயிற்றுக்கிழமை 17ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
தேசிய தின அணிவகுப்பு இணையத்தளத்துக்குச் சென்று அங்குள்ள தொண்டூழிய நடவடிக்கைகளில் கலந்துகொள்ள பதிவு செய்யலாம். அல்லது சொந்தமாக தொண்டூழிய நடவடிக்கைகளைத் தொடங்கலாம்.
நாள்பட்ட நோய் உள்ள சிறுவர்களுடன் நட்புகொள்வது, இயலாதவர்களுக்கு உணவு விநியோகிப்பது, முதியவர்களுக்கு மின்னிலக்கத் திறன்களைக் கற்றுத்தருவது உள்ளிட்ட நடவடிக்கைகள் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன. இணையமுகவரி: https://doinggood.ndp.gov.sg/

