உங்களின் தோழியின் காதலன் எப்போதும் அவரைத் திட்டிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஒவ்வொரு முறையும் உங்களின் முதலாளியைச் சந்தித்த பிறகு உங்கள் மனம் துவண்டு போயிருக்கலாம். இதுபோன்ற நேரங்களில் மனதுக்கு ஆரோக்கியமற்ற ஏதோ நடந்துள்ளதை நாம் உணர்ந்தாலும் அவை உணர்வுரீதியான துன்புறுத்தலுக்கான அறிகுறிகள் என்பதை நாம் கவனிக்காமல் போயிருக்கலாம்.
பயமுறுத்துவது, அவமானப்படுத்துவது, ஒருவரைத் தனிமைப்படுத்துவது என வெவ்வேறு தந்திரங்களை ஒருவர் நாடுவதே உணர்வுரீதியாக துன்புறுத்தல் ஆகும்.
நமது மனநலனையும் நமது நெருக்கமானவரின் மனநலனையும் தற்காத்திட, இதுபோன்ற துன்புறுத்தலை தொடக்கக் கட்டத்திலேயே கண்டறிவது முக்கியம்.
உணர்வுரீதியான துன்புறுத்தல்
என்றால்...
கையை ஓங்காமல், எவ்வித உடல்ரீதியான துன்புறுத்தலையும் செய்யாமல் ஒருவரைக் கட்டுப்படுத்தவோ தண்டிக்கவோ அவமானப்படுத்தவோ தனிமைப்படுத்தவோ மற்றொருவர் செய்யும் ஒரு செயலை உணர்வுரீதியான துன்புறுத்தல் என்பர் நிபுணர்கள்.
காதலர்களிடையே மட்டுமன்றி குடும்ப உறுப்பினர்களிடையேயும் நட்பு வட்டத்திலும்கூட இவ்வகையான துன்புறுத்தல் ஏற்படலாம்.
பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையே, முதலாளிக்கும் ஊழியருக்கும் இடையே, ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே எனப் பொதுவாக இருவருக்கிடையிலான உறவில் இதுபோன்ற உணர்வுரீதியான துன்புறுத்தல் நிகழலாம்.
இருப்பினும், துன்புறுத்தலுக்கு ஒருவரை ஆளாக்குகிறோம் என்பதை உணராத நிலையும் உண்டு என்றும் மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.
மற்றும் சிலர், தங்களின் உறவில் அனுபவித்ததையே பாவித்துப் பிறருக்குத் தங்களை அறியாமலேயே உணர்வுரீதியான துன்புறுத்தலை இழைக்கலாம்.
அறிகுறிகளைக் கண்டறிவது...
உணர்வுரீதியான துன்புறுத்தல் நபருக்கு நபர் வேறுபடும். இருப்பினும் ஒருசில அறிகுறிகளை வைத்துத் துன்புறுத்தல் நேர்ந்திருப்பதைக் கண்டறியலாம்.
மற்றவர் முன்னிலையில் ஒருவரை விடாமல் அவமானப்படுத்தலாம். ஒருவர் பேசும்போது அவரைப் பார்த்து நகைப்பது, புனைபெயர் சூட்டுவது, முகம் சுளிப்பது, பயனற்ற முறையில் விமர்சிப்பது போன்றவற்றில் ஒருவர் ஈடுபடுவது ஓர் அறிகுறியாகலாம்.
ஒரு சிலர் தங்களின் தேவையை நிறைவுசெய்யும் வரை ஏதோ ஒரு பொருளையோ தகவலையோ தராமல் இருப்பதும் ஓர் அறிகுறியாகும். உதாரணமாக, 'எனக்குத் தேவையானதை நீ தராவிட்டால் நான் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன்' என்று மிரட்டல் விடுக்கலாம்.
ஒருவரின் உடைமைகள், கைபேசி, கடன் அட்டைகள் போன்றவற்றை வைத்துக்கொண்டு கட்டுப்படுத்த முயல்வதும் ஒருவகை துன்புறுத்தல் என்கின்றனர் நிபுணர்கள்.
துன்புறுத்தலை நிறுத்த...
உணர்வுரீதியான துன்புறுத்தலை அணுகுவதற்கு ஒரு குறிப்பிட்ட வழியேதும் இல்லை. ஒவ்வோர் உறவும், ஒவ்வொரு நபரும் வேறுபடும் நிலையில் சில வேளைகளில் உடல் ரீதியான அல்லது பாலியல் துன்புறுத்தலும் நிகழலாம்.
துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஒருவர், தன்னைத் துன்புறுத்துவரிடமிருந்து எந்த அளவு பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறார் என்றும் அந்த உறவிலிருந்து விலகினால் தமது பாதுகாப்புக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்றும் தானே மதிப்பிட வேண்டும்.
பாதுகாப்பு ரீதியாக தனக்கு ஆபத்து இருக்கலாம் என்பதை ஒருவர் உணர்ந்தால் உடனே வேறு குடும்ப உறுப்பினர், நண்பர்கள், வேலை நண்பர்கள் அல்லது மனநல ஆலோசகரை நாடலாம்.
இவ்வாறு ஆதரவு வழங்கும் ஒருவரைக் கண்டுபிடித்து அவரிடம் துன்புறுத்தலுக்கு ஆளாவதைப் பற்றி பகிர்ந்துகொள்ளலாம். அவர்கள் உதவியுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் திட்டமிடலாம்.
துன்புறுத்துபவரை உடனே உங்கள் வாழ்க்கையிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்யலாம். இருப்பினும் வேலை, பணம், பிள்ளைகள் போன்ற அம்சங்கள் தொடர்பில் ஒருவரிடமிருந்து விலகுவதும் சிக்கலாக அமையலாம்.
ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் துன்புறுத்துபவரை நேருக்கு நேர் வைத்து வெளிப்படையாகப் பேசுவதும் உதவலாம்.
மீண்டுவர வழிகள்...
உணர்வுரீதியான துன்புறுத்தலுக்கு நீங்கள் ஆளாகியிருந்தால் அதனால் ஏற்படும் பாதிப்பு, அந்தக்குறிப்பிட்ட உறவு நீடிக்கும் காலத்தைத் தாண்டியும் நீடிக்கலாம். அதனால் உங்களின் மனநலனையும் திடத்தையும் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர ஒரு சில வழிமுறைகளை நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
மனநல ஆலோசகரை நாடத் தயக்கம் வேண்டாம். ஒருவரின் தன்னம்பிக்கை அளவை மீண்டும் வலுவாக்குவதற்கு இதுபோன்ற நிபுணர்களே சிறந்த முறையில் உதவுவர். ஆதரவுக் குழு ஒன்றில் சேரலாம்.
இணையத்தில் அல்லது நேரடியாக இதுபோன்ற குழுக்களில் இணையும்போது பிறருக்கும் இதுபோன்ற துன்புறுத்தல் நேர்ந்துள்ளதை அறிந்துகொண்டு ஆறுதல் கொள்ளலாம்.
உடல்நலத்தையும் பேணுவது முக்கியம். மனநலனுக்கும் உடல்நலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால் எவ்வகை துன்புறுத்தலிலிருந்தும் மீண்டுவருவதற்கு உடல்நலனைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.
போதுமான தூக்கம், உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு போன்றவற்றை வாழ்க்கைமுறையில் கடைப்பிடிக்க முயற்சி செய்யலாம்.
இறுதியாக, புதிய உறவுகளை நாடத் தயங்க வேண்டாம். முடிந்து போனதை நினைத்து வரக்கூடிய நல்லுறவுகளைத் தவிர்க்க வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள்.
செய்தி: இணையம்,
படம்: பிக்சபே

