கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டில் உலகம் கிட்டத்தட்ட முழுமையாகவே முடங்கிப்போனது. அப்போது நிறுவனங்கள் மெய்நிகரில் சந்திப்புகளை நடத்த வகைசெய்யும் 'ஸூம்' செயலி எதிர்பாரா வகையில் பிரபலமடைந்தது. அந்நிறுவனத்தின் வர்த்தகம் சூடுபிடித்தது.
சென்ற ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்த காலாண்டில் 'ஸூமின்' வருவாய் 54 விழுக்காடு அமோக வளர்ச்சி கண்டு ஒரு பில்லியன் டாலராகப் பதிவானது. எனினும், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் அதன் வளர்ச்சி 12 விழுக்காடு குறைந்தது.
'ஸூமின்' வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் சிறிய வர்த்தகங்கள். கொள்ளைநோய்ப் பரவலிலிருந்து உலகம் மீண்டுவந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் அத்தகைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் அதிக மாற்றம் இருக்காது என்று நிதித் துறை கவனிப்பாளர்கள் சிலர் கணித்துள்ளனர்.
எனினும், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் போன்ற மாறுபட்ட சேவைகள் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் கூடுதலானோர் வேலையிடங்களுக்குத் திரும்பினாலும் 'ஸூம்' தழைக்கும் என்று அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் கூறியதாக புளூம்பர்க் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. 4,000க்கும் அதிகமான புதிய ஊழியர்களை வேலைக்கு எடுக்கவும் 'ஸூம்' திட்டமிட்டுள்ளது.

