யுகேஷ் கண்ணன்
அனைத்துலக காதல் கல்வி நிலையமும் 'லஞ்ச் ஆக்சுவலி' நிறுவனமும் சமூக வளர்ச்சிக் கட்டமைப்புடன் இணைந்து உலகின் தலைச்சிறந்த காதல், திருமணச் சேவைகளை வழங்கும் தொழிலதிபர்களுக்கான மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றியவர்களில் 'மேட்ரிமோனி.காம்' நிறுவனத்தின் தலைவரான திரு முருகா ஜானகிராமனும் ஒருவர். இந்தியாவில் திருமணச் சேவைத் துறையின் முன்னோடிகளில் ஒருவரான இவர், 1996ல் அமெரிக்காவில் பணியாற்றத் தொடங்கினார்.
அங்கு வசித்த தமிழர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பங்களிக்க வேண்டும் என்று எண்ணி, தமிழ் நாள்காட்டி, விழாக்கால வாழ்த்துகள், சமையல் குறிப்புகள், திருமணச் சேவைகள் ஆகியவற்றை வழங்கும் இணையத்தளம் ஒன்றை இவர் தொடங்கினார்.
அவற்றுள் திருமணச் சேவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் 2000ல் 'தமிழ் மேட்ரிமோனி.காம்' எனும் இணையத்தளத்தை திரு முருகா தொடங்கினார்.
இந்தியாவில் இச்சேவைக்கு அதிக தேவை இருப்பதை உணர்ந்த திரு முருகா, 2004ல் அதன் செயல்பாடுகளைத் தமிழ்நாட்டிற்கு மாற்றி, தம் நிறுவனத்தை இந்தியாவின் பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தினார்.
தெலுங்கு மேட்ரிமோனி.காம், மலையாளம் மேட்ரிமோனி.காம் போன்ற இணையத்தளங்களின் வழி தமிழ்நாட்டையும் தாண்டி பிற மாநிலங்களில் கிளைகளை இவர் தொடங்கினார்.
மொழி, சாதி, சமயம் என மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப திருமணச் சேவைகளை வழங்க ஏறக்குறைய 300 இணையத்தளங்களின் வாயிலாக முனைகிறார் திரு முருகா. சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருப்போர், விவாகரத்தானவர்கள், மருத்துவர்கள், ராணுவ வீரர்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்காக தனிப்பட்ட சேவைகளையும் இவரது நிறுவனம் வழங்கி வருகிறது.
2004 முதல் இதுவரை பல மில்லியன் திருமணங்கள் இவரது நிறுவனத்தின் உதவியோடு நடைபெற்றுள்ளதாகவும்
அவற்றில் பெரும்பாலானவை நிலைத்து நிற்கும் திருமணங்களாக அமைந்துள்ளன என்றும் இவர் குறிப்பிட்டார்.
இம்மாநாட்டில் மற்ற நாடுகளின் காதல், திருமண கலாசாரத்தைப் பற்றி கற்றதுடன் அந்நாடுகளில் இச்சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றியும் தெரிந்துகொண்டதாக திரு முருகா தெரிவித்தார்.
ஜூலை 18ஆம் தேதி ஹுவோன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலிருந்தும் காதல், திருமணச் சேவைகளை வழங்கும் வல்லுநர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
காதலிக்கவும் திருமணம் செய்துகொள்ளவும் விரும்புவோருக்கு எவ்வாறு உதவலாம், அவர்களுக்கு ஏற்றவர்களை எவ்வாறு பரிந்துரைக்கலாம், எத்தகைய புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தலாம் போன்ற பல கருப்பொருள்களை ஒட்டி கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழல் காரணமாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாநாடு நடைபெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சமூக வளர்ச்சிக் கட்டமைப்பின் தலைவர் டக்லஸ் ஃபூ கூறினார். திருமணச் சேவைத் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் இம்மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டது பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
மாநாட்டில் பேசிய திரு ஸ்டெஃபன் பான்ஸ், காதல், திருமணச் சேவைகளை எவ்வாறு மற்ற நாட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன என்பதை அறிய இம்மாநாட்டிற்கு தாம் வந்ததாகக் கூறினார்.
ஜப்பானின் 'ஐபிஜே' நிறுவனத்தில் திறன்பேசிச் செயலி வடிவமைப்பாளராக பணிபுரியும் இவர், காதல், திருமணச் சேவைகளை வழங்குவோர், எவ்வாறு அவர்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஜோடிகளை பரிந்துரைக்கலாம் என்பதை இதுபோன்ற மாநாடுகளில் தெரிந்துகொள்ளலாம் என்றார் இவர்.
மேற்கத்திய நாடுகளில் வழங்கப்படும் சில காதல் சேவைகளை தற்போது ஆசியாவில் வழங்குவதற்கு ஏதுவான சூழல் இல்லாதபோதிலும், அவற்றைப் பற்றி கற்றது சுவாரசியமான அனுபவமாக அமைந்ததாக இவர் கூறினார்.

