சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லை ஏப்ரல் 1ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து, வாகனமோட்டிகள் மலேசியாவுக்குச் சென்று வருகின்றனர்.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட 'ஹோண்டா சிவிக் டைப் ஆர்' கார் ஒன்று, மலேசியாவின் பாகாங் மாநிலம், ஜென்டிங் ஹைலண்ட்சில் உள்ள ஸ்கைஅவென்யூ கடைத்தொகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் காணாமல்போனதாக ஜூலை 16ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
மூன்று நாள்கள் கழித்து, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கொண்டோமினிய வாகன நிறுத்துமிடத்தில் அது கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த காரின் சில பாகங்களைக் காணவில்லை என்றும் அதில் வேறொரு பதிவு எண் பட்டை பொருத்தப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.
மலேசியாவில் இதுபோன்ற சிக்கல்களுக்கு ஆளாகும்போது, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சில கேள்விகளுக்கு இங்கு பதிலளிக்கப்படுகிறது.
சிங்கப்பூருக்கு வெளியே என் வாகனத்தைப் பயன்படுத்த கூடுதல் காப்புறுதியைப் பெற வேண்டுமா?
பொதுவாக, தனியார் வாகன காப்புறுதிக் கொள்கை, மலேசிய தீபகற்பத்திலும் மலேசியா-தாய்லாந்து எல்லையில் இருந்து 80 கிலோமீட்டர் தூரம் வரையிலும் செல்லுபடியாகும்.
மலேசியாவில் காரையோ மோட்டார்சைக்கிளையோ பயன்படுத்த, மூன்றாம் தரப்புக்கு ஏற்படும் அபாயத்துக்கு எதிராக செல்லுபடியாகும் காப்புறுதியை வைத்திருப்பது சட்டபடி கட்டாயமாகும்.
குறைந்தபட்ச காப்புறுதி அளவான இது, மற்ற தரப்புக்கு ஏற்படும் சேதத்தையோ காயத்தையோ சரிசெய்ய உதவும்.
ஆனால், இந்தக் காப்புறுதி உங்களுக்கோ உங்கள் வாகனத்துக்கோ பொருந்தாது.
மலேசியாவில் என் காரைக்
காணவில்லை - நான் என்ன செய்வது?
காவல்துறையிடம் புகார் அளித்து, அதற்குரிய ஆவணத்தை சிங்கப்பூருக்குக் கொண்டு வரவும். உங்கள் காப்புறுதி நிறுவனத்திடம் கோரிக்கையைத் தாக்கல் செய்யவும். விரிவான, மூன்றாம் தரப்பு காப்புறுதிக் கொள்கையைக் கொண்டிருப்போருக்கு மட்டுமே இழப்பீடு வழங்குவது பொருந்தும்.
என் கார் திருடப்பட்டுவிட்டதால், எப்போது எனக்கு இழப்பீடு வழங்கப்படும்?
மலேசியாவில் கார் திருடப்பட்டால், காவல்துறை விசாரணை முடிவடையும்வரை காப்புறுதி நிறுவனம் காத்திருக்கும். விசாரணை முடிந்த பின்னரே இழப்பீடு வழங்கப்படலாம்.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட என் கார், மலேசியாவில் விபத்துக்குள்ளானது. காவல்துறையிடம் நான் புகார் அளிக்க வேண்டுமா?
ஆமாம். நாட்டின் 'சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987'ன்கீழ், 24 மணி நேரத்திற்குள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் விபத்து குறித்து புகார் அளிப்பது சட்டபடி கட்டாயமாகும்.
உங்களது ஓட்டுநர் உரிமையையும் காப்புறுதிச் சான்றிதழையும் எடுத்துச் செல்லுங்கள்.
சிங்கப்பூரில் உள்ள உங்களது காப்புறுதி நிறுவனத்திடம் நீங்கள் கோரிக்கையைத் தாக்கல் செய்யும்போது, காவல்துறையிடம் நீங்கள் புகார் அளித்ததற்கான ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
காப்புறுதி நிறுவனத்திடம் அடுத்த நாளுக்குள் விபத்து குறித்து தெரியப்படுத்த வேண்டும்.
மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காருடன் என் கார் விபத்துக்கு உள்ளானால், அதற்குரிய இழப்பீடு எனக்குக் கிடைக்குமா?
இது மிகவும் கடினமான காரியமாகும். எல்லைக்கு இருபுறங்களிலும் உள்ள காப்புறுதி நிறுவனங்களுக்கு இடையே அதிகாரபூர்வமான தொடர்பு இல்லாததே இதற்குக் காரணம்.
ஒவ்வொரு தரப்பும் தம் சொந்த காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக கோரிக்கையைத் தாக்கல் செய்வதே ஆக விரைவான, எளிதான தெரிவாக இருக்கும் என்று ஜிஐஏ தலைமை நிர்வாகி ஹோ காய் வெங் வாகனமோட்டிகளுக்கு அறிவுறுத்துகிறார்.
மலேசியாவுக்கு வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது சிக்கலைவிட்டு விலகி இருக்க என்ன செய்ய வேண்டும்?
மலேசியாவுக்கு வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது உங்களிடம் முக்கிய ஆவணங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். காப்புறுதிச் சான்றிதழ், வாகனப் பதிவு அட்டை உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். உங்கள் காப்புறுதி நிறுவனத்தைத் தொடர்புகொள்ள அதன் தொடர்பு விவரங்களை உங்கள் கைப்பேசியில் பதிவு செய்துகொள்ளவும்.
பாதுகாவல் அதிகாரிகள் இருக்கும் வெளிச்சமான, எளிதில் கண்ணுக்குத் தெரிகிற இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைப்பது சிறந்தது. வாகனத்தில் உள்ள விலை மதிப்பிலான உடைமைகளைக் கண்ணுக்குத் தெரியாதவாறு வைத்து இருக்க வேண்டும்.
வாகனத்திற்குள் கண்காணிப்புக் கருவியைப் பொருத்தி, அது எல்லா நேரமும் செயல்படும்படி உறுதி செய்வது நல்லது. திருடர்களைத் தடுக்கக்கூடிய அது, விபத்து ஏற்பட்ட ஆதாரத்தை வழங்கும் பயனுள்ள கருவியாக இது திகழ்கிறது.

