சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் திருமுறை மாநாடு வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) வரை செளத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலய திருமண மண்டபத்தில் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு தேவகோட்டையைச் சேர்ந்த திரு ந.ஸ்ரீநிவாசன், இந்நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்கிறார்.
முதல் நாள் திரு க.அம்பலவாணர் சிறப்புச் சொற்பொழிவாக 'திருமுறையில் தொண்டு நெறி' என்ற தலைப்பிலும் மற்ற இரு நாள்களிலும் 'திருமுறையில் ஞானநெறி', 'திருமுறையில் பக்தி நெறி' என்ற தலைப்புகளிலும் உரையாற்ற உள்ளார்.
டெப்போ ரோடு அருள்மிகு ருத்ர காளியம்மன் ஆலயத்தின் ஆதரவுடன் நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாட்டில் பொது அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் இக்குவனம் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
மாநாடு தொடர்பாக முன்னரே நடைபெற்ற திருமுறைகள் ஓதும் போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி, மாறுவேடப் போட்டி என இன்னும் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் சனிக்கிழமை இரவிலும் ஞாயிற்றுக்கிழமை காலையிலும் இரவிலும் வழங்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு மார்சிலிங்கில் உள்ள அருள்மிகு சிவகிருஷ்ண ஆலயத் திருமண மண்டபத்தில் நடைபெறும் 63 நாயன்மார் குருபூசையைத் தொடர்ந்து இடம்பெறும் கேள்வி-பதில் நேரத்தில் திரு ந.ஸ்ரீநிவாசனும் டாக்டர் சுப திண்ணப்பனும் வருகை தருவோர் எழுப்பும் சைவ சமய கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பர்.
சிங்கப்பூர் இந்து ஆலயங்களில் பணியாற்றும் எல்லா ஓதுவார்களும் ஒவ்வொரு மாலை நேரமும் பக்கவாத்தியக் கலைஞர்களின் துணையுடன் திருமுறைகளைப் பண்ணோடு ஓதிப் பரவசப்படுத்துவர்.