சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம், 'எஸ்பிளனேட்-தியேட்டர்ஸ் ஆன் த பே' உடன் இணைந்து, மூன்று இசை மேதைகள் பங்குகொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
'திரிவேணி' எனும் இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் உஸ்தாத் ஸாகிர் உசேன், வயலின் மேதை கலா ராம்நாத், வீணை விற்பன்னர் ஜெயந்தி குமரேஷ் ஆகியோர் இணைந்து இசை விருந்து படைக்கவிருக்கின்றனர்.
அடுத்த மாதம் 14ஆம் தேதி இரவு ஏழரை மணிக்கு 'எஸ்பிளனேட் கச்சேரி அரங்கில்' இடம்பெறும் இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் ஆதரவு வழங்குகிறது.
இந்தியா அதன் 75வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடுவதை முன்னிட்டும் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பல்லாண்டு கலாசார நல்லுறவைப் பிரதிபலிக்கும் வண்ணமாகவும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
திரிவேணி என்ற சொல் மூன்று நதிகளின் சங்கமத்தைக் குறிக்கிறது. அதுபோல இந்த மூன்று புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் விரல்வழி வழியும் இசை நதிவெள்ளம்போல் பெருகி, சங்கமித்து வருகையாளர்களை மகிழ்விக்கும் என்று இவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கலா ராம்நாத் இந்துஸ்தானி சங்கீதத்தை வயலினிலும் ஜெயந்தி குமரேஷ் கர்நாடக சங்கீதத்தை வீணையிலும் வாசிக்கும் வேளையில் ஸாகிர் உசேன் இருவகை இசையையும் தபேலாவில் வாசிப்பார் என்று கூறப்பட்டது.
$100, $75, $50 நுழைவுச்சீட்டுகளுக்கு https://www.sistic.com.sg/events/triveni0822 என்ற இணைய முகவரியை நாடலாம்.

