சிங்கப்பூரர்கள் குடும்பத்துடன் ஈடுபடும் வகையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பல்வேறு இலவச நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
'ஃபார்வர்ட் ஃப்யூச்சர்' எனும் தலைப்பில் இரண்டு வார நடவடிக்கைகளுக்கு 'சிங்கப்பூர் டிஸ்கவரி சென்டர்' ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாதம் 30, 31ஆம் தேதிகளிலும் அடுத்த மாதம் 6, 7, 9 ஆகிய தேதிகளிலும் முற்பகல் 11 மணி முதல் இரவு எட்டு மணி வரை இவற்றில் பங்குகொள்ளலாம்.
'லேசர் டேக்' போட்டி, 'டிஸ்கோ' நடன விருந்து நிகழ்ச்சி, கைவினைப் பொருள் உருவாக்குதல், விளையாட்டுகள் போன்றவற்றில் இலவசமாக ஈடுபடலாம்; சிங்கப்பூர் உணவுவகைகளைக் கடைகளில் வாங்கி ருசிக்கலாம். இதற்கு மட்டும் கட்டணம் உண்டு.
அடுத்ததாக, 'ஒன்றாக விளையாடுவோம்' எனும் கருப்பொருளில், சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் உள்ள ஓசிபிசி ஸ்குவேரில் சில நடவடிக்கைகள் இடம்பெறவிருக்கின்றன.
இம்மாதம் 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை இவை நடைபெறும்.
லயன் சிட்டி நடன மாநாடு, கூட்டு உடற்பயிற்சி, உடலுறுதி நடவடிக்கைகள், உருளைச் சறுக்குப் பயிலரங்கு, பலகைச் சறுக்குப் போட்டி, 'பார்க்கோர்' எனும் தடைகளைத் தகர்த்து முன்னேறும் நடவடிக்கை ஆகியவற்றில் பல்வேறு வயதினரும் கலந்துகொள்ளலாம்.
மேலும், 'நன்றாக வாழ்வோம், சிறப்புடன் முதுமையடைவோம்' திட்டத்தின்கீழ், மக்கள் கழகமும் சுகாதார மேம்பாட்டு வாரியமும் இணைந்து ஆறு இலவச நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
உடற்பயிற்சி, சுகாதாரக் குறிப்புகள், மானியத்துடன் கூடிய மருத்துவப் பரிசோதனை, சுவையான ஆரோக்கிய உணவை ருசித்தல், புத்துணர்வு தரும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், மின்னிலக்கத் திறன்கள், நிதித் திட்டமிடல் திறன்கள் போன்றவற்றைக் கற்றுக்கொள்ளல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர், 'ஹெல்தி 365' செயலி மூலம் பதிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

