அம்ரான் கனி பின் முசா பக்கருக்கு வயது 28.
கடல்துறையில் பணிபுரியும் இவர் ஒரு மின்காற்பந்து விளையாட்டாளர்.
டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் இம்மாதம் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்ற மின் 'ஃபிஃபா' உலகக் கோப்பைக்கான போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த 'டீம் ஃபிளாஷ்' குழுவினரில் இவரும் ஒருவர்.
இத்தகைய உலக மேடையில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தது தனக்குப் பெருமை அளித்ததாகக் கூறும் அம்ரான், தலைசிறந்த விளையாட்டாளர்களுடன் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
சிறு வயதில் காற்பந்தாட்டத்தின் மீது ஏற்பட்ட நாட்டம், மெல்ல மெல்ல மின்காற்பந்தாட்டத்தின் மீது திரும்பியதாகக் கூறும் இவர், தனது 16ஆம் வயதில் இருந்து இந்த விளையாட்டில் ஈடுபடுகிறார்.
காற்பந்தாட்டத்துடன் ஒப்பிடுகையில் மின்காற்பந்தாட்டம் சற்று மாறுபட்டது. காற்பந்தாட்டத்தில் பந்தை உதைப்பது, ஓடுவது எனக் கால்களுக்கு நிறைய வேலை.
ஆனால் இதில், கை-கண் ஒருங்கிணைப்பு சீராக இருப்பது மிக முக்கியம். சிதறாத கவனம், திடமான மனம் இரண்டும் இதற்கு அவசியமென்கிறார் இவர்.
தகுதிச் சுற்று ஆட்டங்களில் வெற்றிபெற்று இம்முறை 24 நாடுகள் இறுதிச் சுற்றில் போட்டியிட்டன. சிங்கப்பூர் 17ஆம் இடத்தைப் பிடித்தது.
இது எதிர்பார்த்த முடிவு இல்லை என்றாலும், தொடர்ந்து திறன்களை மேம்படுத்திக்கொண்டு அடுத்தமுறை உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக விளையாடுவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளார் அம்ரான். முனைப்புடன் விளையாடி வெற்றிக்கனியைச் சுவைப்பதில் தங்கள் அணி கவனம் செலுத்தும் என்றார் இவர்.
'டீம் ஃபிளாஷ்' குழுவினருடன் மின்காற்பந்து ஆட்டக்காரர் அம்ரான் (முன்னால்).
படம்: டீம் ஃபிளாஷ்

