புகழ்பெற்ற 'இன்ஸ்டகிராம்' செயலிக்குப் போட்டியாகக் கருதப்படும் 'பீ ரியல்' செயலி அண்மைய வாரங்களில் ஆக அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் 11ஆம் தேதியை ஒட்டிய வாரத்தில் மட்டும், ஆப்பிள் நிறுவனத்தின் செயலியகத்தில் ஏறக்குறைய 1.7 மில்லியன் முறை இது பதிவிறக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மிக முக்கியமான தருணத்தில் இது முடங்கிப்போவதாகப் புலம்பினாலும் பயனாளர்கள் பலரும் இந்தச் செயலியைப் புறக்கணிக்கவில்லை.
'பீ ரியல்' செயலியில் அன்றாடம் ஒரு நினைவூட்டல் வரும். இரண்டு நிமிடத்துக்குள் ஒரு படத்தைப் பதிவிட வேண்டும். இல்லாவிட்டால் நேரம் தாழ்த்திப் பதிவிட்டதாக அனைவருக்கும் தெரியும் வகையில் முத்திரை குத்தப்படும்.
இதனால் அனைவரும் அடித்துப் பிடித்துப் படத்தைப் பதிவேற்றத் துடிக்கையில் செயலி முடங்கிப்போகும் வாய்ப்பு அதிகம்.
'இன்ஸ்டகிராம்', 'டுவிட்டர்' போன்ற சமூக ஊடகங்களும் அறிமுகமான புதிதில் இத்தகைய சிக்கல்களைச் சந்தித்ததைக் கவனிப்பாளர்கள் சுட்டுகின்றனர்.
பிரான்சில் 2020ஆம் ஆண்டில் அறிமுகம்கண்ட இந்தச் செயலி, இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அமெரிக்கக் கல்லூரி மாணவர்களிடையே பிரபலமாகத் தொடங்கியது.

