நம் வாழ்க்கையை, வாழ்க்கைமுறையை கொவிட்-19 கொள்ளைநோய் அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது. வெளிநாட்டுப் பயணங்களில் இன்பம் காணலாம் என்றிருந்த நாம், கிருமித்தொற்று சூழலால் சுகாதாரத்திற்கும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கத் தொடங்கினோம்.
நாடுகள் தங்கள் எல்லைகளைத் திறந்துவரும் இந்நிலையில், சுற்றுச்சூழலுக்குக் கூடுதல் தீங்கு இழைக்காமல் வெளிநாட்டுப் பயணங்களை எவ்வாறு பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளலாம் என்பது குறித்து மக்கள் திட்டமிடுவதை அண்மைய மாதங்களில் காண முடிகிறது. வெளிநாட்டுப் பயணங்களுக்குச் சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுப்பயண இடங்களைத் தேர்வு செய்வதில் இவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இயற்கைப் பகுதிகளுக்குப் பொறுப்புணர்வுடன் பயணம் மேற்கொள்ளுதல், அங்குள்ள உள்ளூர்வாசிகளின் நலனைப் பேணிக்காத்தல், கற்றல் நிகழ்தல் போன்ற அம்சங்களைச் சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுப்பயணங்கள் கொண்டிருக்கலாம்.
இயற்கைக் காட்சியில் லயித்துப் போகும் அதேநேரம், ஒருவர் அந்த இயற்கையைப் பாதுகாப்பதற்கும் பங்களிக்கலாம்.
இத்தகைய சுற்றுப்பயணங்களால் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்புகளும் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. உள்ளூர்வாசிகளும் தங்களின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஊக்கம் பெறுவர் என்ற எதிர்பார்ப்பில் அவர்களுக்கு நிதி நிவாரணம் வழங்கப்படுகிறது.
மலையேறும்போதும் குகைகளுக்குள் சென்று சுற்றிவரும்போதும் வனப் பகுதிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர முடியும். பவளப் பாறைகளைக் காண முக்குளிக்கும்போதும் சுறாக்களுடன் நீந்தும்போதும் தண்ணீர் மாசுபாடு குறித்த விழிப்புணர்வைச் சுற்றுப்பயணிகள் பெறுவர். அந்தச் சுற்றுச்சூழலில் பயணம் செய்தவாறு அங்குள்ள உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழல் அமைப்புமுறைக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாமல் இருப்பர்.
அதிகம் கண்டிராத ஒரு சுற்றுலாத் தளத்தை அடையும் ஒருவர், அங்குள்ள இயற்கையை ரசித்த பின்பு, அவ்விடத்தை மேம்பட்ட நிலையில் விட்டுச் செல்ல வேண்டும் என்பதே இதுபோன்ற சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுப்பயணங்களின் நோக்கமாகும்.
இதற்கிடையே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அறிந்தவாறு அதிகமான இளையர்களும் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
சுற்றுப்பயணத் துறையில் உள்ள நிறுவனங்கள் இதை அறிந்து தங்களின் செயல்பாடுகளை மாற்றும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பருவநிலை மாற்றத்தால் இயற்கைப் பகுதிகள் மெல்ல மெல்ல அழிந்துவருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிவதால் அது நேராமல் பார்த்துக்கொள்ள பலரும் தங்களால் இயன்றதைச் செய்கின்றனர். பசுமை வாழ்க்கைமுறையை ஒவ்வொருவரும் பின்பற்றுவதுடன் அடுத்த தலைமுறையினரிடையேயும் அதை வித்திட வேண்டும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
அத்துடன் மனித உரிமைக்கு ஆதரவு தரவும் அனைத்துலக ரீதியில் அமைதியை நிலைநாட்டவும் முடியும்.
எனவே, சுற்றுப்பயணியாக ஓர் இடத்திற்குச் சென்றாலும் அங்கு நம்மால் எந்த ஒரு பாதிப்பும் சுற்றுச்சூழலுக்கு நேரக்கூடாது என்பதை மனதில் நிறுத்தவேண்டும்.
நமது அடுத்த சுற்றுப்பயணத்தைத் திட்டமிடும்போது அதை எவ்வாறு பொறுப்புணர்வுடன், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் கடப்பாட்டுடன் மேற்கொள்ளலாம் என்பதைக் கருத்தில்கொண்டு மேற் கொள்ளலாம். செய்தி: இணையம், படம்: அன்ஸ்பிலேஷ்

