தமது இடது காலை எட்டு வயதிலேயே விபத்து ஒன்றில் இழந்தார் திருவாட்டி சரிதா விஸ்வநாதன், 39. இவர் டான் டோக் செங் மருத்துவமனையின் ஆதரவுக் குழுத் தொண்டூழியராக, செயற்கை கை/கால் பொருத்தப்பட்டோருக்கும் சக்கர நாற்காலியில் நடமாடுவோருக்கும் ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும் தூணாக உள்ளார்.
விபத்தில் இடுப்பிலிருந்து இடது காலை திருவாட்டி சரிதா இழந்துவிட்டார். தனக்கு நேர்ந்தது மற்றவருக்கும் நேர்ந்துள்ளதை அறியும்போது பலம் தரும் ஆதரவாக அது இருக்கும் என்பதை அவர் நன்கு அறிந்தவர். இவரைப் போலவே சிங்கப்பூரில் நூற்றுக்கணக்கானோர் தங்களின் நேரத்தை மருத்துவமனைகளிலும் பராமரிப்பு நிலையங்களிலும் தொண்டூழியத்திற்காக செலவழிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் கலந்துறவாடுவதிலும் மருத்துவச் சந்திப்புகளின் வெவ்வேறு காலகட்டங்களில் உதவுவதிலும் இந்தத் தொண்டூழியர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
திருவாட்டி சரிதாவைப் போன்ற தொண்டூழியர்களுக்கு நோய் அல்லது மருத்துவப் பிரச்சினை ஏற்பட்ட அனுபவம் உண்டு.
அதனால் மருத்துவர்களும் சிகிச்சையாளர்களும் பதிலளிக்க முடியாத ஒரு சில கேள்விகளுக்குக்கூட இவர்களால் பதிலளிக்க முடியும். உதாரணத்திற்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டு அதனால் தோலில் ஏற்படக்கூடிய சிறு காயங்களுக்கும் தடிப்புகளுக்கும் என்ன செய்வது என்பதற்கு அதை அனுபவித்த ஒருவராலேயே சிறப்பாக விளக்க முடியும்.
நோயாளிகளுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் எளிய வேலைகளைச் செய்வதற்குக் கவலையும் நோயும் ஒரு தடையாக இருக்கலாம்.
அந்நிலையில் மருத்துவமனையில் முன்பதிவு செய்தல், நோயாளிகளுக்கு வழிகாட்டுதல் போன்ற சூழ்நிலைகளில் உதவும் தொண்டூழியர்களும் உண்டு.
நோயாளிகளை இன்முகத்துடன் வரவேற்பது, மருந்தகத்தில் தேவையான மருந்துகளைத் தயார்செய்வது, தாதியருக்கு ஆதரவாக நோயாளிகளுக்கு உணவு பரிமாறுவது, உணவை ஊட்டுவது போன்ற பல்வேறு வகைகளில் சுகாதாரப் பராமரிப்புத் துறை சார்ந்த தொண்டூழியர்கள் உதவி வருகின்றனர்.
தங்கள் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக அவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
பயிற்சிபெற்ற சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் ஆற்றும் பணிகளுக்கு உன்னத ஆதரவை இந்தத் தொண்டூழியர்கள் நல்குகின்றனர். அத்துடன் விலை மதிக்க முடியாத சேவையையும் நோயாளிகளுக்காக செய்கின்றனர்.
திருவாட்டி சரிதா மும்பையிலிருந்து 2016ஆம் ஆண்டில் இங்கு தம் கணவர், மகளுடன் வந்தார். அவரது தொண்டூழியப் பயணம் அப்போதுமுதல் ஆரம்பமாகிவிட்டதாகக் கூறினார்.
"ஒருவருக்கு ஒப்பற்ற பலத்தை ஓர் ஆதரவுக் குழுவால் தர முடியும். சுகாதார ரீதியாக பாதிக்கப்படும்போது தங்கள் வாழ்க்கை என்னவாகப் போகிறது என்று ஒரு சிலருக்கு அதிர்ச்சியும் கவலையும் ஏற்படலாம். குறிப்பாக, ஊனம் என்பது ஒருவரை முடக்குவது அல்ல, அவரின் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே என்பதை உணர்த்த வேண்டும்," என்று கூறுகிறார் திருவாட்டி சரிதா.