செம்பு அல்லது செப்பு எனப்படும் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டதும் அதன் பயன்பாடும் மனிதகுலத்தின் நாகரிக வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.
நம்மைச் சுற்றிலும் இன்று காணப்படும் பல்வேறு பொருள்களைச் சிறிதளவாவது செம்பு சேர்த்தால்தான் செய்ய முடியும். ஆபரணத் தங்கம், தொழில்நுட்பக் கருவிகள், வாகனங்கள், மின்சாதன இணைப்புகள், கதவுக் கைப்பிடிகள், அலங்காரப் பொருள்கள் எனப் பலவும் இதில் அடங்கும்.
சமையல் பாத்திரங்களும் பழங்காலத்தில் இருந்தே செம்பில் செய்யப்படுவதையும் தொழில்முறை சமையல் வல்லுநர்கள் பலரும் செப்புப் பாத்திரங்களில் சமைப்பதை விரும்புவதையும் நாம் பார்க்கிறோம்.
இதேபோல பண்டைக் காலத்தில் நடைமுறையில் இருந்திருந்தாலும் பின்னர் சில காலம் வெகுவாகக் குறைந்து, இப்போது மீண்டும் அதிகம் பரவுகிறது, குடிநீரை செப்புப் பாத்திரத்தில் வைத்துப் பயன்படுத்தும் பழக்கம்.
இயல்பாகவே நுண்கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது செம்பு. இதில் சேமித்த தண்ணீரைக் குடிப்பதால் உடலின் ஆரோக்கியம் பல வழிகளில் மேம்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
காயத்தை ஆற்றுதல், தோல் சிகிச்சை, வலி நிவாரணம், வீக்கத்தைப் போக்குதல், ரத்த சோகையை குணப்படுத்துதல் என்று பல நன்மைகள் கிடைப்பதாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக செப்புப் பாத்திரத்தில் உள்ள நீரைப் பருகினால் உடலின் நோய்எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்றும் செரிமானம் சீராகும் என்றும் கூறப்படுகிறது.
நோய்எதிர்ப்புச் சக்தி:
கொவிட்-19 கிருமிப்பரவலுக்குப் பிறகு உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியில் ஈடுபாடு காட்டாதவர்களே இல்லை எனுமளவு உலகில் இதுகுறித்த கவனம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இது, அது என்றில்லாமல் எந்த நோயிலிருந்தும் காத்துக்கொள்ள ஒருவரது நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாக இருக்க வேண்டும்.
ஒருவரது உடலில் செம்புச் சத்து குறைந்தால் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறையும் அபாயம் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அடிக்கடி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குன்றியதாகக் கண்டறியப்பட்டோரும் செம்புச் சத்தை அதிகரிக்கும் வழிகளைப் பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நுண்கிருமிகளை அழிப்பதால் குடிநீர் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளில் இருந்து செப்புப் பாத்திர நீர் நம்மைப் பாதுகாக்கின்றது.
வலுவான எலும்புகள்:
எலும்புகள் வலுவாக இருக்க கால்சியம், வைட்டமின்-D போன்றவை தேவை என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் செம்புச் சத்து குறைவதாலும் எலும்புகள் வலுவிழக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
செம்புச் சத்து எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் 'ஆஸ்டியோபொரோசிஸ்' எனும் எலும்புப் புரை நோயைக் குறைக்கவும் உதவும் என்கின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள். செம்புப் பாத்திரத்தில் உள்ள நீரை அருந்துவது இதற்கு நல்ல பலன் தரும் என்று நம்பப்படுகிறது.
இதய நலம்:
செம்பு, நம் உடலில் கொழுப்பு, ட்ரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவைக் குறைத்து, இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுவதால் இதயம் தொடர்பான சிக்கல்களைக் குறைக்கிறது. ரத்தத்தில் செம்பின் அளவு குறைந்தால் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
செப்புப் பாத்திரத்தில் உள்ள நீரைக் குடிக்கும்போது ரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும்.
ஆயுர்வேதம்:
செப்புப் பாத்திரத்தில் உள்ள நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், உடலின் வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலை காணும் என்றும் இது ஆரோக்கியத்திற்கு உதவும் என்றும் ஆயுர்வேத மருத்துவமுறை கூறுகிறது. இந்தக் குடிநீர் உடலின் அமிலத்தன்மையையும் கட்டுப்படுத்துவதாக இது சொல்கிறது.
பருகும் முறை:
செப்புப் பாத்திரத்தில் தண்ணீரை எப்படிச் சேமித்தால் முழுமையான பயன்களைப் பெறலாம்?
கூடுமானவரை வாய் அகன்ற பாத்திரத்தை இதற்குப் பயன்படுத்த வேண்டும். குறுகிய பாத்திரங்களைச் சுத்தம் செய்வது சிரமம்.
முறையாகச் சுத்தம் செய்யாவிட்டால் அங்கே கிருமிகள் தேங்கவும் ரசாயன மாற்றத்தால் பச்சைக் களிம்பு போன்ற ஏடு படியவும் வாய்ப்புண்டு. சூடான நீரை ஊற்றக்கூடாது.
அன்றாடம் இரவில் செப்புப் பாத்திரத்தில் நீரை நிரப்பி, காலை வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். குறைந்த பட்சம், நான்கு மணி நேரமாவது ஆக வேண்டும்.
இந்த முறை, தண்ணீரில் உள்ள நுண்கிருமிகளை அழித்து நீரைச் சுத்திகரிக்கிறது. 'ஆன்டிஆக்ஸிடன்ட்' நிறைந்த இந்த நீர், உடலில் புதிய, ஆரோக்கியமான உயிரணுக்களை உருவாக்கத் துணைசெய்கிறது.
சுத்தப்படுத்தும் முறை:
அன்றாடம் செப்புப் பாத்திரத்தைத் துலக்குவது நல்லது. வழக்கமாக நாம் பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் ரசாயனத் திரவத்தைத் தவிர்த்துவிடவும்.
புளி அல்லது எலுமிச்சைச் சாற்றுடன் உப்பு சேர்த்து செப்புப் பாத்திரங்களைத் துலக்கலாம். வெறும் உப்பு மட்டும் பயன்படுத்தித் துலக்க வேண்டாம்.
தகவல், படங்கள்: இணையம்

