கிவி பழங்கள் நம்மில் பலருக்கும் பிடித்தமானவை. ருசிக்கு அப்பால் அது நம் உடலுக்குப் பல வகையான நன்மைகளை அளிக்கக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.
வைட்டமின்-C, நார்ச்சத்து ஆகியவை கிவி பழங்களில் அதிக அளவில் நிறைந்துள்ளன.
ஏறக்குறைய 69 கிராம் எடையுள்ள ஒரு கிவி பழத்தில் கிட்டத்தட்ட 64 மில்லிகிராம் வைட்டமின்-C இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது, பெரியவர்களுக்கு அன்றாடம் பரிந்துரைக்கப்படும் வைட்டமின்-C அளவில் 70 முதல் 85 விழுக்காடு.
தூக்கமின்மையால் தவிப்போருக்கு இந்தப் பழம் ஒரு வரப்பிரசாதம் என்கிறது 2011ல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு. கிவி பழத்தில் உள்ள 'செரடோனின்' ரசாயனம் ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுவதாகக் கருதப்படுகிறது.
கிவி பழத்தில் நார்ச்சத்து, பொட்டேசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் இதய நலனையும் இது பாதுகாக்கிறது. பொட்டேசியம் ரத்தக் குழாய்களின் இறுக்கத்தைத் தளர்த்தி, ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
இதனால் இதய நோய்கள் ஏற்படுவது குறைகிறது. பொட்டேசியம் சிறுநீரகக் கற்கள் உருவாகாமலும் பாதுகாக்கிறது.
இதிலுள்ள நார்ச்சத்து, ரத்தக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி இதய நோய், மலச்சிக்கல் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. அத்துடன் செரிமானத்திற்கும் உதவுகிறது.
'ஃபோலேட்' எனப்படும் வைட்டமின்-B9, கிவி பழங்களில் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற செறிவான உணவாக இது வகைப்படுத்தப்படுகிறது. ரத்தம் உறைவதில் முக்கியப் பங்கு வகிக்கும் வைட்டமின்-K, கிவி பழங்களில் காணப்படுகிறது. வலுவான எலும்புகளுக்கும் இது அவசியம்.

