நம்மில் பலருக்கு இரவு உணவை நிறைவாக உண்ட பிறகும்கூட சில நாள்களில் நள்ளிரவுக்குமேல் பசிப்பதுபோலத் தோன்றலாம். சிலருக்கு இது அடிக்கடி நிகழலாம்.
குறிப்பாக இரவு விழித்திருந்து தொலைக்காட்சி பார்க்கையில் உணவு குறித்த விளம்பரங்களைப் பார்த்தால் அனிச்சையாகச் சிலருக்குப் பசிக்கக்கூடும்.
சற்றும் யோசிக்காமல் சாக்லெட், பிஸ்கட், உருளைகிழங்கு வறுவல், கேக் எனக் கலோரிகள் பற்றியெல்லாம் கவலைப் படாமல் ஒரு கட்டு கட்டிவிடுவர். இத்தகைய செயல் செரிமானத் திறனைப் பாதிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். கழிவுகளை அகற்றுவதில் உடல் மும்முரமாக இருக்கையில் மேலும் செரிப்பதற்கான உணவை உள்ளே தள்ளினால், பல்வேறு கோளாறுகள் ஏற்படுமென்று எச்சரிக்கின்றனர்.
அதற்கு அப்பாலும், இது நல்ல வாழ்க்கைமுறையைப் பிரதிபலிக்கவில்லை என்ற கருத்தும் பலருக்கு உண்டு.
ஆனால், எனக்குப் பசிக்கிறதே! என்ன செய்வது என்று கவலைப்படுகிறீர்களா?
பொட்டலமிடப்பட்ட எந்த உணவையும் தொடாதீர்கள். அவற்றுக்குப் பதிலாக, இனிய சுவையுடைய பழங்களை உண்ணலாம். கேரட், வெள்ளரி போன்ற சத்துள்ள காய்கறிகளை நறுக்கி உண்ணலாம்.
இவை எல்லாம் எளிதில் செரிக்கக்கூடியவை என்பதால் உடலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கமாட்டா.
பசி என்று தோன்றிய உடனே உண்ணாமல் காய், பழங்களை நறுக்குவதில் சிறிது நேரம் செலவிடுவதால் உங்கள் பசி சற்றுத் தணியவும் வாய்ப்பு உண்டு.
சில நேரங்களில் இரண்டு குவளை தண்ணீரை அருந்தினால்கூட இப்படிப்பட்ட பசி போன்ற உணர்வு மாறும். உடலுக்கும் செரிமானப் பிரச்சினை இல்லை என்கின்றனர் அனுபவசாலிகள். உறங்கச் செல்லும் முன்னர் மஞ்சள்தூள் சேர்த்துக் காய்ச்சிய பாலை வெதுவெதுப்பாக அருந்தினால் இரவில் பசியால் விழிக்க நேரிடாது என்றும் சிலர் சொல்கின்றனர்.
படம்: இணையம்

