மனிதர்கள் மட்டுமன்றி உயிரினங்கள் அனைத்திற்குமே வாழ்வின் இன்றியமையாத செயல்களில் ஒன்றாகக் கருதப்படுவது தூக்கம். உடல் ஆரோக்கியத்தைப் பேண நல்ல தூக்கம் அவசியம்.
முறையாகத் தூங்காதவர்களுக்குப் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும். நாள் முழுதும் உழைத்துக் களைத்த உடல் மறுநாள் மீண்டும் உழைப்பதற்கு, தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வது தூக்கத்தில்தான். இவையெல்லாமே இரவில் தூங்குவது குறித்த தகவல்கள்.
ஏதேதோ காரணங்களால் பலரும் பகலில் தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். பகலில் சிறிது நேரம் தூங்குவது பின்னர் தொடர்ந்து சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவுவதாகவும் கூறப்படுகிறது. குட்டித் தூக்கம் என்று செல்லமாக இதைக் குறிப்பிடுவோரும் உண்டு.
ஆனால் அடிக்கடி இவ்வாறு பகலில் குட்டித் தூக்கத்தில் ஈடுபடுவது ஆபத்தை விளைவிக்கும் என்று அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க இதயச் சங்கத்தின் 'ஹைப்பர்டென்ஷன்' எனும் சஞ்சிகையில் இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வழக்கமாக இவ்வாறு பகலில் சிறிது நேரம் தூங்குவோருக்கு உயர் ரத்த அழுத்தமும் பக்கவாதமும் ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஆய்வு கூறுகிறது. பகலில் தூங்கும் பழக்கம் அறவே இல்லை என்று கூறியோரைவிட அடிக்கடி குட்டித் தூக்கம் போடுவேன் என்று சொன்னவர்களுக்குப் பின்னாளில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படக்கூடிய வாய்ப்பு 12 விழுக்காடு அதிகம் என்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு 24 விழுக்காடு அதிகம் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
358,451 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் தொடக்கத்தில் இவர்களில் யாரும் உயர் ரத்த அழுத்தம் அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படவில்லை. பங்கேற்பாளர்கள் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். அரிதாகப் பகலில் தூங்குவோர், சில நேரங்களில் தூங்குவோர், வழக்கமாகப் பகல் தூக்கத்தில் ஈடுபடுவோர் என்பவை இந்த மூன்று குழுக்கள்.
60 வயதுக்குக் கீழானோரிடையே பகலில் தூங்கும் பழக்கமுடையோர் உயர் ரத்த அழுத்தத்துக்கு ஆளாகும் வாய்ப்பு 20% அதிகம் காணப்பட்ட வேளையில், 60 வயதுக்கு மேலானோரிடம் இந்த விழுக்காடு 10ஆகப் பதிவானது.
வழக்கமாகப் பகலில் தூங்குவதாகக் கூறியோரில் பெரும்பாலோர் ஆண்கள்; குறைந்த வருவாய், புகைபிடிக்கும் பழக்கம், இரவில் தூக்கமின்மை, குறட்டை விடுதல் போன்ற பிரச்சினைகளையும் இவர்கள் எதிர்நோக்குவதாகக் கூறப்பட்டது.
நீரிழிவு நோயாளிகள், இரவு நேரப் பணியாளர்கள், ரத்தத்தில் அதிகமான கொழுப்பு கண்டறியப்பட்டோர் போன்றோரைத் தவிர்த்து மற்றவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இவ்வாறு தெரியவந்ததாக ஆய்வாளர்கள் கூறினர்.
இதற்கு முன்னர் நடத்தப்பட்ட வேறு சில ஆய்வுகளிலும் பகலில் சிறிது நேரம் தூங்கும் பழக்கம் உள்ளோருக்கு மனச்சோர்வு, அதிக உடல் எடை, இரவில் தூக்கமின்மை போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, இரவில் குறைந்தது ஏழு மணி நேரத் தூக்கம், நேர்மறை எண்ணங்கள் போன்றவற்றால் பகலில் அடிக்கடி குட்டித் தூக்கத்தில் ஈடுபடும் பழக்கத்தை விரட்டியடிக்கலாம் என்று வல்லுநர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

