யுகேஷ் கண்ணன்
சிங்கப்பூரில் வாழும் மலபார் முஸ்லிம் சமூகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது, ஜாலான் சுல்தான்-விக்டோரியா ஸ்திரீட் சாலைச் சந்திப்பில் வீற்றிருக்கும் மலபார் பள்ளிவாசல்.
இதன் வரலாற்றையும் மலையாள சமூகத்தின் அங்கமான மலபார் முஸ்லிம்களின் வரலாற்றையும் விவரிக்கும் முதல் நூல் சென்ற ஞாயிற்றுக்கிழமை வெளியீடு கண்டது.
கல்வி அமைச்சின் மூத்த கல்வி அதிகாரியான முகமது நசீம் 'சிங்கப்பூரின் நீலப் பள்ளிவாசலும் கேரளாவிலிருந்து குடிபெயர்ந்த முஸ்லிம் சமூகம் குறித்த பார்வையும்' எனும் நூலை எழுதியுள்ளார்.
ஏறக்குறைய 17ஆண்டுத் தேடலின் விளைவாக, வரலாற்றுத் தொகுப்பாக உருவாகியுள்ளது 204 பக்கங்கள் கொண்ட இந்த நூல்.
மலபார் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த திரு நசீம், 2005ஆம் ஆண்டில் தாம் எதேச்சையாகக் காண நேர்ந்த செய்தித்தாள் புகைப்பட விளக்கக் குறிப்பினால் உதித்த ஐயமே இந்த நூல் உருவாகக் காரணமாக இருந்ததாகத் தெரிவித்தார்.
கடந்த 1963ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட மலபார் பள்ளிவாசல் சிங்கப்பூரின் முதல் அதிபரான யூசோஃப் இஷாக்கால் திறந்துவைக்கப்பட்டது. தற்போது இந்தப் பள்ளிவாசலின் விரிவாக்கப் பணிகள் நடந்துவருகின்றன.
மலபார் பள்ளிவாசலின் அடிக்கல் நாட்டும் விழா கடந்த 1956ஆம் ஆண்டு நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் குறிப்பில் மலபார் முஸ்லிம் ஜமாத்தின் தலைவராக எழுதப்பட்டிருந்த எச்.ஏ. ஜீவாபாய் என்ற பெயர் மலையாளியின் பெயரைப்போல இல்லை என்று இவருக்குத் தோன்றியது.
ஐயத்தைப் போக்கும் வேட்கையில் தேசிய நூலகத்திற்குச் சென்று வரலாற்றுக் குறிப்புகளை எடுத்துப் பார்த்தார். அந்த ஆண்டில் ஜமாத்தின் தலைவராக இருந்தவர் சி.எச். அபு என்று தெரியவந்தது. ஒரு கட்டத்தில் மலபார் முஸ்லிம்களின் பூர்வீகமான இந்தியாவின் கேரளாவிற்கே சென்று முன்னோடித் தலைமுறையினரிடம் பேசித் தகவல் சேகரித்தார்.
பல்வேறு காரணங்களால் இந்த நூலை எழுதும் பணியை வெகுநாளாகத் தள்ளிப் போட்டுவந்ததாகவும், கொவிட்-19 கிருமிப்பரவல் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நூலை எழுதி முடித்ததாகவும் நூலாசிரியர் நசீம் கூறினார்.
தோ பாயோவில் அமைந்துள்ள "ஒன் பீப்பல்எஸ்ஜி" கட்டடத்தில் கலாசார, சமூக, இளையர்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா இந்த நூலை வெளியிட்டார்.
புகைப்படத்துக்குத் தவறான குறிப்பை 1956ஆம் ஆண்டில் எழுதிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளருக்கு நன்றி என்று தமது உரையில் தெரிவித்தார் நூலாசிரியர். மிகச் சிறிய சமூகமான மலபார் முஸ்லிம் சமூகம் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளதால், அவர்களின் கதையும் மக்களுக்குத் தெரிவது முக்கியமென இவர் கருதுகிறார்.
இதன்வழி, மற்ற சிறு சமூகங்களும் முன்வந்து அவரவர் கதைகளைப் பகிர்ந்துகொள்ள முனைவரெனத் திரு நசீம் நம்பிக்கை கொண்டுள்ளார்.
இப்புத்தகத்தை தேசிய மரபுடைமைக் கழகமும் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றமும் இணைந்து வெளியிட்டுள்ளன.
கினோகுனியா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகக் கடைகளில் $30க்கு இதை வாங்கலாம். விற்பனைவழி ஈட்டப்படும் தொகை மலபார் பள்ளிவாசலின் மறுசீரமைப்பு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

