சிங்கப்பூரின் 57வது பிறந்த நாள் அடுத்த சில நாள்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வேளையில் அதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பல உணவகங்கள் மற்றும் உணவு, பான நிறுவனங்கள் உள்ளூரின் தனிப்பட்ட சுவை மாறாமல் பல்வேறு புதிய உணவுகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. ரெம்பாப்பாவின் இந்திய செட் உணவு, லக்சா பர்கர், ஸ்வென்சஸ் 'சில்லி கிராப் பாஸ்தா', 'பிளாக் டேப்'பின் கிரேஸி மில்க் ஷேக் அவற்றில் சில.
இவ்வாண்டின் தேசிய நாளை இத்தகைய உள்ளூர் சுவை உணவுகளுடன் கொண்டாடி மகிழ்வோம்.
ரெம்பாப்பாவில் சமையல் நிபுணர்கள் இணைந்து தயாரித்த உணவு
சிங்கப்பூரின் பாரம்பரிய உணவுக்குப் பெயர்போன ரெம்பாப்பாவில் சமையல் நிபுணரும் உரிமையாள ருமான டேமியன் டிசில்வா, நவீன ஆசிய உணவுகளின் இருப்பிடமான 'பாத்' உணவகத்தின் சமையல் நிர்வாகி மார்வஸ் இங், 'மாஸ்டர்செஃப் சிங்கப்பூர்' போட்டியில் பங்கேற்று புகழ்பெற்ற வசுந்தரா ராமசாமி ஆகியோருடன் சேர்ந்து தேசிய நாளைக் கொண்டாடும் வகையில் இரண்டு 'செட்' உணவுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
ஒவ்வொரு 'செட்' உணவும் ஒரு நாள் மட்டும்தான் வழங்குவோம் என்று அவர் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 6ஆம் தேதி சீன இரவு செட் உணவுடன் கொண்டாட்டம் தொடங்குகிறது. நான்கு பேருக்குத் தேவையான இந்த செட்டின் விலை $168.
ரெம்பாப்பா, பாத் உணவகங்களில் இந்தச் சிறப்பு உணவு கிடைக்கும். இதில் சுவையான வாத்து இறைச்சி பிரதான உணவாக இருக்கும்.
இதற்குப் பிறகு வசுந்தரா ராமசாமியும் ரெம்பாப்பா சமையல் குழுவினரும் கூட்டாக தயாரித்த பாரம்பரிய இந்திய உணவு செட் சுவைக்கக் கிடைக்கும். இதன் விலை ஒருவருக்கு $68. இதனை நான்கு பேர் வரை பகிர்ந்து உண்ண முடியும்.
பச்சை நிற தேங்காய் சட்னி, தக்காளித் தொக்கு, காரச் சட்னியுடன் முறுகலான மசாலா தோசை இந்த செட் உணவில் முக்கிய உணவாக இருக்கும்.
சீன செட் உணவு ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 6.00 மணியி லிருந்து இரவு 10.30 மணி வரை யிலும் இந்திய செட் உணவு ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 11.00 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணி வரையிலும் கிடைக்கும். முன்பதிவுக்கு தொலைபேசி எண் 9459-1603, மின் அஞ்சல்: papa@rempapa.sg
இடம்: ரெம்பாப்பா, 01-01 பார்க் பிளேஸ் ரெசிடன்சஸ், பிஎல்கியூ சிங்கப்பூர், 2 பாய லேபார் ரோடு.
தேசிய நாள் 'மில்க் ஷேக்'
பிரபல 'மில்க் ஷேக்' குளிர்பானக் கடையான 'பிளாக் டேப்' தேசிய கொடியின் நிறங்களைப் போல புதிய 'மில்க் ஷேக்' பானத்தைத் தயாரித்து விற்பனைக்கு வெளி யிட்டுள்ளது.
சிங்கப்பூர் தேசிய உணர்வை பிரதிபலிக்கும் இந்த 'கிரேஸி மில்க்' ஷேக்கின் விலை $23. உயரமான கண்ணாடிக் குவளையில் சிவப்பு, வெள்ளை நிற நட்சத்திரங்கள் ஜொலிக்க, மேலடுக்கில் பளிச்சிடும் சிவப்பு நிற கேக் வைத்து அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இறால் சாறு கலந்த கோழி இறைச்சி சாண்ட்விச், இறால் சாறு பூசப்பட்ட 'கிறிஸ்பி சிக்கன்' போன்ற உணவுகளையும் இங்கு சுவைக்கலாம். இடம்: பிளாக் டேப் கிராஃப்ட் பர்கர்ஸ், பீயர்ஸ், மரினா பே சேண்ட்ஸ் 'த ஷாப்ஸ்', எண் 2 பேஃபிரண்ட் அவென்யூ. ஆகஸ்ட் 8 முதல் 14 வரை மட்டுமே 'கிரேஸி மில்க் ஷேக்' கிடைக்கும். தொலைபேசி எண்: 6688-9957.
ஸ்வென்சன்ஸ் 'சில்லி
கிராப்' உணவு வகைகள்
'சில்லி கிராப்' மீதான மோகத்தை தீர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் ஸ்வென்சன்ஸ் உணவகங்களை நோக்கி படையெடுக்கலாம். 'சில்லி கிராப் பிட்சா' ($17.90), 'சில்லி கிராப் பாஸ்தா' ($14.90) போன்ற வித்தியாசமான 'சில்லி கிராப்' உணவுகளை சுடச்சுட பரிமாறுகிறார்கள். ஸ்வென்சன்ஸ் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களில் அதன் பல்வேறு உணவுகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்கள் 'சில்லி கிராப்' ஐஸ்கிரீமை வெல்லவும் வாய்ப்பிருக்கிறது. இந்த ஐஸ்கிரீம் விற்பனைக்குக் கிடைக்காது. ஆர்ச்சர்ட் ரோடு, பிளாசா சிங்கப்பூராவில் உள்ள ஸ்வென்சன்ஸ் உட்பட தீவின் பல்வேறு இடங்களில் உள்ள அந்த உணவகத்தின் கிளைகளில் ஆகஸ்ட் 30 வரை இந்த வித்தியாசமான உணவு சுவைக்கக் கிடைக்கும்.
லக்சா பர்கர்
கடந்த ஆண்டைப் போல இவ்வாண்டும் தேசிய நாளை முன்னிட்டு மெக்டோனால்ட்ஸ் சிறப்புப் பர்கரை அறிமுகம் செய்துள்ளது.
'லக்சா டிலைட் பர்கர்' (S$7.40) இறால், கோழி இறைச்சி ஆகிய இரண்டு சுவைகளில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
இத்துடன் ஊதா நிற அரிசி, தேங்காய் பாலில் செய்யப்பட்ட 'புலுட் இத்தாம் பை'யையும் சேர்த்து சுவைக்கலாம்.
இதன் விலை S$1.70. இரண்டு உணவுகளும் சிங்கப்பூர் முழுவதும் உள்ள மெக்டோனால்ட்ஸ் உணவகங்களில் கிடைக்கும்.

