சிங்கப்பூரில் வீணாக்கப்படும் உணவுப் பொருள்கள் நாட்டின் மொத்தக் கழிவுகளில் ஏறக்குறைய 12 விழுக்காடு என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறுகிறது.
தயாரிக்கப்படும் உணவு இவ்வாறு வீணாகும்போது கரியமில வாயு, மீத்தேன் உள்ளிட்ட தீங்கு இழைக்கும் வாயுக்களின் வெளியேற்றத்துக்குப் பங்களிப்பதோடு உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் உள்ளிட்ட வளங்களும் வீணாகின்றன.
உணவகங்கள், உணவு, பானக் கடைகள் போன்றவற்றில் மட்டுமன்றி, வீடுகளிலும் உணவு வீணாவதைத் தடுத்தால்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும்.
தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்களை வாங்குவதையும் உணவைத் தயாரிப்பதையும் தவிர்த்தல் நல்லது.
கடைக்குச் செல்லுமுன்னர் வீட்டில் ஏற்கெனவே உள்ள உணவுப் பொருள்களைப் பார்த்து, அதற்கு ஏற்ப வாங்கவேண்டிய பொருள்களின் பட்டியலைத் தயாரிப்பது சாலச் சிறந்தது.
புதிதாக வாங்கிய உணவுப் பொருள்களை குளிர்பதனப் பெட்டியின் உட்புறத்திலும் முன்பே வாங்கியவற்றை முன்புறமாகவும் அடுக்கிவைக்கலாம். இதனால் கவனிப்பின்றி காலாவதியான உணவை வீசும் சூழல் தவிர்க்கப்படும்.
ஒவ்வொரு உணவுப் பொருளையும் அதனைச் சேமிக்கும் முறையை அறிந்துகொண்டு பாதுகாப்பாகச் சேமிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, சமைத்த உணவை குளிர்பதனப் பெட்டியின் மேல் அடுக்குகளிலும் சமைக்காத காய்கறி, பழங்கள் போன்றவற்றை கீழ் அடுக்குகளிலும் வைக்கலாம்.
இவற்றைத் தனித்தனியே நன்கு மூடப்பட்ட பாத்திரங்களில் வைப்பது முக்கியம். பொட்டலத்தைப் பிரித்து உணவைக் கொஞ்சம் எடுத்த பிறகு மீதியை வேறொரு காற்றுப் புகாத பாத்திரத்திற்கு மாற்றி வைப்பது நல்லது.
சிலவகைப் பழங்களிலிருந்து வெளியாகும் இயற்கை வாயுக்களால் அருகில் உள்ள உணவுகள் விரைவில் கெட்டுப்போகும். வாழைப்பழம், ஆப்பிள், தக்காளி போன்றவற்றை மற்ற காய், பழங்களுடன் சேர்த்து வைக்கக்கூடாது.
அடிக்கடி வீணாகும் உணவு வகைகளைப் பட்டியலிட்டு அவற்றை மீண்டும் வாங்கும் முன்னர் சரியாகத் திட்டமிடுதல் நல்லது.
மசாலாப் பொருள்களைக் குளிர்பதனப் பெட்டியில் வைப்பதன் மூலம் நீண்டகாலம் பயன்படுத்தலாம். காய்கறிகளின் தோல், எஞ்சிய உணவு போன்றவற்றை உரமாக மாற்றும் முறைகளைக் கற்றுக்கொண்டும் உணவு வீணாவதைத் தடுக்கலாம். மொத்தத்தில் உணவை வீணாக்காமல் தடுப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு.

