உடலின் இயக்கத்திற்கு உணவு மிகவும் முக்கியம். அந்த உணவில் நம் உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்குத் தேவைப்படும் சத்துகள் சரிவிகிதத்தில் அமைந்திருந்தால்தான் முழுமையான நற்பலன் கிடைக்கும்.
ஊட்டச் சத்துகள் சரிவிகிதத்தில் இல்லாமற்போனால் ஆரோக்கியம் எட்டாக்கனியாகி, ஏங்க வைக்கும். சில வகை ஊட்டச் சத்துகளின் பற்றாக்குறை உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிப்பதும் உண்டு.
அத்தகைய சில வகை ஊட்டச்சத்துகளை மருந்துகள் அல்லது துணை உணவுகள் மூலம் கட்டாயம் சேர்த்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைப்பர். 'ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்' எனும் ஊட்டச்சத்தும் அவற்றில் ஒன்று.
இதை மருந்துகள் மூலமாக அன்றி, அன்றாட உணவின் மூலம் உடலில் சேர்ப்பது மிகவும் சிறந்தது என்று வல்லுநர்கள் சொல்கின்றனர். இந்தச் சத்து நிறைந்திருக்கும் உணவுவகைகளை முறையாக உண்டுவந்தால் ஆரோக்கியம் பேணும் அமுதமாக இது செயல்படும் என்று கருதப்படுகிறது.
மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றைக் குறைக்க உதவும் 'ஒமேகா-3' கொழுப்பு அமிலங்கள் முடக்குவாதம் ஏற்படாமல் தடுக்கவும் வகைசெய்யும் என்று கூறப்படுகிறது. நோய் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்தவும் இது கைகொடுக்கிறதாம்.
ரத்தத்தில் கொழுப்பின் அளவை இது குறைப்பதால் இதய நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றில் இருந்தும் பாதுகாப்பு அளிப்பதாகச் சொல்லப்படுகிறது.
ரத்தம் உறைதலைத் தடுப்பதால் இது ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.
'ஒமேகா-3' ஊட்டச்சத்து, மூளையின் செயல்திறனை மேம்படுத்துவதால் 'அல்சைமர்', மறதி நோய் போன்றவற்றைத் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கண் பார்வை நன்றாக இருப்பதற்குத் துணைநிற்கும் இது, மனநலத்திற்கும் உதவுகிறது. இந்தச் சத்து நிறைந்த உணவுகளை உண்பதால் மன அழுத்தம், பதற்றம் ஆகியவை குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
'ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்' பொதுவாக 'சியா விதைகள்', ஆளி விதைகள், சாமன் மீன், காராமணிப் பயறு, சோயா, வால்நட் உள்ளிட்ட பருப்பு வகைகளில் நிறைந்துள்ளன.
பச்சைப் பசேல் என்றிருக்கும் கீரைகளில் இந்தச் சத்து நிறைந்திருக்கிறது. அதிக செலவின்றி, எளிதில் சமைக்கக்கூடிய கீரைகள் இந்த வகையில் வரப் பிரசாதம் என்றே சொல்லலாம்.
உடற்பயிற்சி செய்ய சோர்வாக உணர்பவர்கள் 'ஒமேகா-3' சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் புத்துணர்ச்சி பெறுவர்.
குறிப்பாக கர்ப்பிணிகள் இவற்றை உண்பதால் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

