டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஜூலை 31ஆம் தேதி லிட்டில் இந்தியா பகுதியில் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தின் தொண்டூழியர்கள் 40க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியை மேற்கொண்டனர்.
முன்னதாக அப்துல் கலாம் இலட்சியக் கழகத் தலைவர் தூதர் கேசவபாணி, டாக்டர் அப்துல் கலாமைப் பற்றிய சில தகவல்களை நினைவுகூர்ந்தார்.
சிறப்பு அழைப்பாளராக லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) தலைவர் சி.சங்கரநாதன், டாக்டர் அப்துல் கலாமின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின், டாக்டர் அப்துல் கலாம் பற்றிய தம் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் தம்முடைய நெருங்கிய நண்பர் என்றும் அவரோடு சேர்ந்து மரக்கன்றுகளை நடும்பணியை தாம் மேற்கொண்டதாகவும் திரு சங்கரநாதன் குறிப்பிட்டார்.
"சிங்கப்பூர் தூய்மையான நாடு என்று உலகத்திற்கே தெரியும். இங்கே துப்புரவுப் பணியா? என்று சிலர் கேட்கலாம். நாட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவருடைய கொள்கையில் ஒன்று என்றும் அவருடைய கொள்கையை நினைவுபடுத்தும் பொருட்டு, குப்பை அகற்றும் பணியை மேற்கொள்வது மிகச்சிறந்த அஞ்சலி என்றும் திரு சங்கரநாதன் கூறினார்.
அவர் நினைவாக மரக்கன்றுகள் நடும் பணியையும் சிங்கப்பூரில் செய்யவேண்டும் என்ற தமது விருப்பத்தை அவர் பதிவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய திரு பி.அருமைச்சந்திரன், நிகழ்ச்சியை எப்படி நடத்தப்போகிறோம் என்ற விவரங்களைத் தொண்டூழியர்களுக்கு அறிவித்ததுடன், இந்தப் பணிக்காக முழு ஆதரவையும் வழங்கி, துப்புரவுப் பணிக்கான கருவிகளையும் தந்து உதவிய தேசிய சுற்றுப்புற வாரியத்துக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தைச் சேர்ந்த தொண்டூழியர்கள் டாக்டர் அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தினர். லிட்டில் இந்தியாவை 10 பிரிவுகளாகப் பிரித்து, நான்கு பேர் கொண்ட அணிகள் துப்புரவுப் பணியை மேற்கொண்டன.
கொவிட்-19 நோய்த்தொற்று காரணமாக கடந்த ஈராண்டுகளாக டாக்டர் அப்துல் கலாமுக்கு முறையாக அஞ்சலி செலுத்தமுடியாமல் போனதை நினைவுகூர்ந்த பலரும், இந்த நிகழ்ச்சியில் மிக மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு அவர் மீது தங்களுக்குள்ள அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தினர். முனைவர் நிஷார் அனைவருக்கும் நன்றிகூற நிகழ்ச்சி நிறைவடைந்தது.

