தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பலவகை உணவுகளுடன் சிங்கப்பூர் உணவு விழா

2 mins read
03abdcf2-c645-4727-aed3-a66617d9c469
சாறு இல்லாத லக்சா, தேங்காய்பால் சோறு, நண்டு பர்கர் என்று இந்த ஆண்டு உணவு விழாவில் ருசித்து மகிழக்கூடிய உணவுகளில் சில. படங்கள்: சிங்கப்பூர் உணவு விழா -
multi-img1 of 4

ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெற உள்ள சிங்கப்பூர் உணவு விழாவில் பல்சுவை உணவுகளைச் சுவைத்து மகிழலாம்.

"உண்மையான உணவுப் பிரியர்கள் மட்டுமே" என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டின் 29வது உணவு விழாவில் பாரம்பரிய, தற்கால உணவுகளை ருசி பார்க்கலாம்.

விழாவில் பங்கேற்கும் உணவகங்களின் சிறப்பு உணவுகள், பயிலரங்கு, மெய்நிகர் வகுப்புகளுடன் கூடிய சுற்றுலாக்கள், மெய்நிகர் சந்தை என்று இந்த ஆண்டு உணவுவிழாவில் பல்வேறு அங்கங்களை எதிர்பார்க்கலாம்.

மரினா பே சேண்ட்சுக்கு அருகேயுள்ள பேஃபிரண்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழாக் கிராமத்தில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 11 வரை உணவு விழா நடைபெறு கிறது. 25க்கும் மேற்பட்ட உணவுக் கடைகள் உண்டு. நுழைவுக் கட்டணம்: $15

லிஷாவின் தின்பண்ட விழா

இந்திய உணவு வகைகள் உட்பட பல்வேறு உணவு வகைகளை லிஷாவின் தின்பண்ட விழா அறிமுகப்படுத்தவுள்ளது.

செப்டம்பர் 10ஆம் தேதி பர்ச் சாலையில் நடக்கும் இந்த விழாவில் 100 அமைப்புகள் கலந்துகொண்டு உலகமெங்கும் பிரபலமான தின்பண்ட வகைகளை பொதுமக்கள் சுவைத்து உண்பதற்கு சந்தர்ப்பமளிக்கிறது.

"துருக்கி, மலேசியா, இலங்கை நாடுகளின் தூதரகங்களின் ஆதரவோடு இந்த தின்பண்ட விழாவை ஏற்பாடு செய்வதில் லிஷா பெருமைகொள்கிறது. நாங்கள் முன்பு 2019ஆம் ஆண்டில் எவ்வாறு 'கறி' விழாவை 200 அமைப்புகளோடு செய்தோமோ அதைப் போல மக்களுக்கு இவ்வாண்டு இந்த தின்பண்ட விழாவை வரவழைத்து சுவையான உணவை அவர்களுக்கு வழங்க உற்சாகத்துடன் உள்ளோம்," என்றார் லிஷாவின் துணைத் தலைவரான ஜாய்ஸ் கிங்ஸ்லி.

நண்டு கொஃப்தா, பானிபூரி, இறால் வடை, கோழி லாலிபாப், கச்சாங் புத்தே, பௌ பஜ்ஜி என வாயூற வைக்கும் அளவிற்கு தின்பண்டங்களை ருசிக்க பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கலாம்.

கூடுதல் செய்தி: மாதங்கி இளங்கோவன்