ஹராரே: இந்திய கிரிக்கெட் அணி ஸிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடுகிறது.
முதல் போட்டி இம்மாதம் 18ஆம் தேதி ஹராரேயில் நடைபெறுகிறது. இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.
துணைத் தலைவர் லோகேஷ் ராகுல் காயம் மற்றும் கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டதால் ஸிம்பாப்வே தொடரில் அவர் களம்இறங்கமாட்டார் என்று கருதப்பட்டது. இந்திய அணியின் தலைவராக ஷிகர் தவான் அறிவிக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே, லோகேஷ் ராகுல் குணமடைந்து முழு உடல் தகுதி பெற்றதால் ஸிம்பாப்வே தொடரில் அணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஷிகர் தவான் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடும் ஸிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அணித் தலைவர் கிரேக் எர்வின் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ரெஜிஸ் சகாப்வா அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸிம்பாப்வே அணி வீரர்கள் விவரம் வருமாறு:- ரெஜிஸ் சகாப்வா, சிக்கந்தர் ராசா, இன்னசென்ட் கையா, கைடானோ, வெஸ்சி மாதேவெரே, ரியான் பர்ல், தனகா ஷிவாண்டா, பிராட்லி எவன்ஸ், லூக் ஜாங்வே, கிளைவ் மாடண்டே, ஜான் மசோரா, முன்யோங்கா, ரிச்சர்ட் நகர்வா, ரிக்டர் நகராவா, நியுச்சி, மில்டன் ஷூம்பா, டிரிபாகோ.
காயம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் வெலிங்டன் மசகட்சா இடம்பெறவில்லை. அண்மையில் பங்ளாதேஷுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை 2-1 என்று ஸிம்பாப்வே கைப்பற்றியதால் இந்தியாவையும் ஒருகை பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் அந்த அணி இருக்கிறது.

