இசைப் பிரியர்களுக்கு: புளுடூத் ஸ்பீக்கர்
இசைப் பிரியர்களுக்கு இது சரியான பரிசாக இருக்கும். எங்கு சென்றாலும் இடைவிடாத இசை அனுபவத்தைப் பெற சிறந்த கையடக்க சாதனமாகும் இது. எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். பிடித்த பாடல்களை எங்கும், எந்த நேரத்திலும் கேட்டு ரசிக்க முடியும்.
குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ சுற்றுலா செல்லும்போதும் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்க உதவும். நீண்டநேரப் பயணங்களின்போது உற்றதுணையாக இருக்கும். விதவிதமாக கிடைக்கும் புளுடூத் ஸ்பீக்கர்களில் தேவைக்கேற்றதைத் தேர்ந்தெடுத்து பரிசளிக்கலாம்.
புத்தகப் பிரியர்களுக்கு: கிண்டில் வாசிப்பு சாதனம்
இந்த மின்னூல் சாதனம் 'புத்தகப் புழுக்கள்' எனப்படுபவர்களின் உள்ளங்கவர் பரிசாக இருக்கும். இது அமேசானின் தயாரிப்பு. புத்தக உலகில் இந்த சாதனத்தை புரட்சி என்றே கூறலாம். புத்தக விரும்பிகளுக்கு இதுவொரு வரப்பிரசாதம்.
அச்சுப் புத்தகங்களைக் கையில் கொண்டு செல்ல வேண்டியதில்லை. புத்தகம் போன்றிருக்கும் இச்சாதனத்தில், அதன் நினைவகத் திறனுக்கு ஏற்ப, மின்னிலக்க வடிவில் பல புத்தகங்களைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
போகும் இடமெல்லாம் விரும்பிய எந்தவொரு புத்தகத்தையும் படிக்கலாம். எந்த மொழிப் புத்தகத்தையும் இதில் வாசிக்க முடியும்.
இதன்கூடவே, அமேசானில் கிடைக்கும் சில மின்னூல்களையும் பரிசளித்தால், திக்குமுக்காடிவிடுவார்கள் புத்தகப் பிரியர்கள்.
தொலைத்துவிட்டு தேடுபவர்களுக்கு: ஏர்டேக்
அடிக்கடி எதையாவது தொலைத்துவிட்டு தேடுபவர்களுக்கு இதைப் பரிசளிக்கலாம். திறன்பேசியைத் தவிர வேறு எதுவும் ஞாபகம் இருப்பதில்லை என்ற இக்கால சூழலில், ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டேக் பெரும் உதவியாக இருக்கும்.
முக்கியமான பொருள்களைத் திறன்பேசி செயலி மூலம் கண்காணிக்கவும் கண்டுபிடிக்கவும் இக்கருவி உதவுகிறது. நாம் அடிக்கடி மறக்கும் அல்லது தொலைந்து போகாமல் பாதுகாக்க நினைக்கும் பொருள்களில் இதை இணைத்துவிடவேண்டும்.
அது கைப்பையோ, வீடு அல்லது வாகனங்களின் சாவியோ, முக்கியமான ஆவணங்கள் அடங்கிய ஒரு பையோ, இல்லை நம் வீட்டு நாய்க்குட்டியோ எதில் வேண்டுமானாலும் இதை இணைத்துவிட்டால், அடுத்த முறை மறந்து விட்டு தேடும் போதோ அல்லது தொலைந்துபோகும் போதோ திறன்பேசி செயலி மூலம் கண்டுபிடித்துவிடலாம். ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டேக் மட்டுமல்லாமல், வேறு பல நிறுவனங்களும் இதுபோன்ற கருவியை வெளியிட்டுள்ளன.
மின்னூட்டியை இயக்க மறப்பவர்களுக்கு: வயர்லஸ் சார்ஜர்
திறன்பேசியை மின்னூட்டியில் இணைத்துவிட்டு, அவசரத்தில் அதன் இயக்க பொத்தானைப் போட மறந்துவிடுபவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
ஆப்பிள் இயங்குதளமோ, ஆண்ட்ராய்ட் இயங்குதளமோ எந்தவிதமான திறன்பேசிகளையும் மின்னூட்டம் செய்வதற்கு ஏற்ற பல வகையான கம்பியில்லா மின்னூட்டி எனும் 'வயர்லஸ் சார்ஜர்கள்' வந்துவிட்டன. இந்த வகையான மின்னூட்டிகள் பெரும்பாலும் தட்டுவடிவில் இருக்கும். இவை கம்பிவடத்தின் மூலமாக மின்சார இயக்கத்தோடு பொருத்தபட்டு இருக்கும். பிறகு அந்த தட்டின்மீது திறன்பேசியை வைத்தால்போதும், திறன்பேசி மின்னூட்டம் ஆகிவிடும்.
இணைய உலாவிகளுக்கு: கூகல் குரோம்கேஸ்ட்
இணையத்தில் அதிக நேரம் உலாவுபவர்கள் திறன்பேசியில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க உதவுகிறது இந்த கருவி.
கூகல் குரோம்கேஸ்ட்டைப் பயன்படுத்தி, திறன்பேசிகள், கையடக்க கணினி, மடிக்கணினி என எதை வேண்டுமானாலும் தொலைக்காட்சியோடு இணைத்து பெரிய திரையில் பார்க்கலாம்.
சிறிய 'டாங்கில்' போன்று சிறிய அளவில் இருக்கும் இந்த சாதனத்தை உங்கள் தொலைக்காட்சியில் பொருத்திவிட்டால் போதும்.
சாதனங்கள் வைத்திருப்பவர்களுக்கு: கேட்ஜெட் பவுச்
ஒருவரிடம் மேலே சொன்னது போன்ற சாதனங்கள் நிறைய இருந்தால், எதைப் பரிசளிப்பது என்று குழம்ப வேண்டாம். அவை எல்லாவற்றையும் பத்திரமாகவும் நேர்த்தியாகவும் பாதுகாக்கக்கூடிய 'பவுச்' அல்லது பையை பரிசளிக்கலாம்.
தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதைவிட அவற்றைக் கவனமாகவும் சரியாகவும் கையாளவேண்டியது மிகவும் முக்கியமாகும். மேலும் பயணத்தின்போது, அனைத்தையும் ஒழுங்குபடுத்தி எடுத்து வைக்கவும் உதவியாக இருக்கும்.
ஒருவரிடம் இருக்கும் சாதனங்களுக்கு ஏற்ப பல வகையான பைகள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து பரிசளிக்கலாம்.
பிறந்தநாள், குடும்ப விழாக்கள் என எதுவாக இருந்தாலும் நாம் அளிக்கும் பரிசு மனதைக் கொள்ளைகொள்வதாக இருக்கவேண்டும் என்று பலர் விரும்புவார்கள். மாறி வரும் மின்னிலக்க உலகத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப சாதனங்களைப் பரிசளிப்பது பயனளிக்கும்.

