வாட்ஸ்அப் பயனர்களின் 'பிரைவசி' எனும் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
குழுவில் இருந்து அமைதியாக
வெளியேறும் வசதி
முன்னதாக வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறும்போது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வரவுள்ள புதிய அம்சத்தின்படி, குழுவில் உள்ள மற்ற பயனர்கள் யாருக்கும் தெரிவிக்காமல் குழுவிலிருந்து வெளியேற அனுமதிக்கிறது. மேலும் குழுவில் இருந்து வெளியேற விரும்பும் போது குழு நிர்வாகிகளுக்கு மட்டுமே தெரிவிக்கக்கூடிய அம்சமும் உள்ளது.
வாட்ஸ்அப் பயன்படுத்துவதை யார்
பார்க்கலாம் என்பது பயனரின் முடிவு
வாட்ஸ்அப் பயன்படுத்துவதை அதில் உள்ள அனைவரும் பார்க்கமுடியும். ஆனால், இனி அந்த கவலை வேண்டாம். வாட்ஸ்அப் பயன்படுத்துவதை யாரெல்லாம் பார்க்க வேண்டும், யாரெல்லாம் பார்க்கக்கூடாது என்பதை நாமே தீர்மானித்துக் கொள்ளமுடியும். இதன் மூலம் நண்பர்கள், குடும்பத்தினர்களுடன் பேசும்போதோ, குறுஞ்செய்தி அனுப்பும்போதோ எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்கலாம்.
உள்நுழைவு ஒப்புதல்
உள்நுழைவுக்கான ஒப்புதல் கேட்கும் புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் மோசடி செய்பவர்களைத் தடுப்பதன் மூலம் தளத்தை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேறு திறன்பேசியில் இருந்து நம்முடைய வாட்ஸ்அப் கணக்கில் உள்நுழைய முயற்சிக்கும்போது, ஏற்கெனவே பயன்படுத்தப்படும் திறன்பேசிக்கு எச்சரிக்கை அனுப்பப்படும். அதிலிருந்து அனுமதி அளித்தால் மட்டுமே உள்நுழைய முடியும்.
ஸ்கிரீன்ஷாட்டிற்குத் தடை
புகைப்படங்கள் அல்லது காணொளியை 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து மற்றவர்களுடன் பகிர்வதைத் தடுக்கிறது. இந்த அம்சம் தற்போது சோதனையில் மட்டும் இருப்பதால் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

