நாளை தொடங்கவிருக்கிறது சிங்கப்பூர் இரவு விழா.
மறுபிறப்பு எனப் பொருள்படும் 'ரீபர்த்' என்பது, ஈராண்டுக்குப் பிறகு நடைபெறும் இவ்வாண்டு விழாவின் கருப்பொருள்.
இரவு விழாவை ஒட்டி, ஹேண்டி சாலையில் உள்ள கேத்தே பில்டிங்கின் முன்புறம் உள்ள புல்வெளியில் ஆறு அறைகளுடன் கூடிய, திரைப்படக் காட்சி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 1957, 58ஆம் ஆண்டுகளில் வெளியான கேத்தே திரைப்படங்களின் கதாபாத்திரங்களைக் காணலாம். தற்போது உருமாறிவிட்ட சிங்கப்பூரின் பழைய நிலப்பகுதிகளை இந்தப் பழைய படங்களில் பார்க்க முடியும். இவற்றையெல்லாம் மீண்டும் கண்முன்னே காணும் ஆர்வத்தை மக்களிடம் விதைப்பது 'கேத்தே ஹோட்டல்' படைப்பின் நோக்கம்.
ஆகஸ்ட் 19, 20, 24, 25, 26 ஆகிய தேதிகளில் இதனைக் காணக் கட்டணம் ஒருவருக்கு 33 வெள்ளி; நான்கு நுழைவுச்சீட்டுகளை 112 வெள்ளிக்கு வாங்கிக் கொள்ளலாம். இரவு 7.30 மணிக்கும் 8.45 மணிக்கும் நிழச்சி நடைபெறும். வெள்ளி, சனிக்கிழமைகளில் கூடுதல் காட்சி இரவு பத்து மணிக்கு இடம்பெறும்.
'எஸ்டர்டே ஒன்ஸ் மோர்: குவீன்ஸ் ஸ்திரீட்' என்பது மற்றொரு நிகழ்ச்சி. 'தோபீஸ்' எனப்படும் இந்திய சலவைத் தொழிலாளிகளின் கதையைச் சொல்லும் இந்த இசைப் படைப்பை, ஒடிசி நடனக் கலைஞர்கள், 'பபிள்' எனப்படும் பிரம்மாண்டமான சவர்க்கார நீர்க்குமிழிகளை உருவாக்கும் 'சிஜே கேர்ள்' போன்றோர் இணைந்து படைக்கின்றனர். ஆகஸ்ட் 19, 20, 26, 27 ஆகிய தேதிகளில் குவீன்ஸ் ஸ்திரீட்டின் வெவ்வேறு பகுதிகளில் இதை இலவசமாகக் காணலாம்.
மேலும், 19ஆம் நூற்றாண்டு இயற்கை வரலாற்று ஓவியங்களின் அடிப்படையில் அமைந்த முப்பரிமாண பறவை வடிவிலான காற்றடைத்த பொம்மைச் சிற்பங்களை இளம் உள்ளூர்க் கலைஞர்கள் 'ஃபோர்ட் கேனிங் பார்க்'கில் பல்வேறு இடங்களில் அமைத்துள்ளனர். ஆகஸ்ட் 19 முதல் 27ஆம் தேதி வரை இவற்றை இலவசமாகக் காணலாம்.
அத்துடன், ஸ்டாம்ஃபர்ட் கோர்ட்டில் உள்ள மணிக்கூண்டின் மேல் ஒளிக்காட்சியைத் திரையிடும் நடவடிக்கையும் இடம்பெறும்.
பிராஸ் பாசா-பூகிஸ் வட்டாரம் குறித்த படைப்புகள், கூடுதலான உள்ளூர்க் கலைஞர்கள் ஆகிய இரண்டு அம்சங்களில் இவ்வாண்டு கவனம் செலுத்தப்படுகிறது.
சிங்கப்பூர் இரவுத் திருவிழாவைஒட்டி மொத்தம் 55 நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் சில:
'ஹீட் ஆஃப் த நைட்':
தேசிய நூலக வாரியம், 'இண்டி டூவர்ஸ்' ஆகியவை ஏற்பாடு செய்துள்ள புதிர்ப் போட்டி. வெவ்வேறு இடங்களில் உள்ள உதவிக் குறிப்புகளைக் கொண்டு புதிருக்கு விடை கண்டுபிடித்தால் பரிசு உண்டு.
சிங்கப்பூர் தேசிய அரும் பொருளகத்தில் ஆகஸ்ட் 19, 20, 26, 27 ஆகிய தேதிகளில் இரவு ஏழரை மணி முதல் நள்ளிரவு வரை இது இடம்பெறும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒருவருக்குக் கட்டணம் பத்து வெள்ளி; ஆறு பேர் கொண்ட குழுவுக்கு ஐம்பது வெள்ளி.
'எஸ்ஜி நைட்ஃபெஸ்ட் ஃபுட் டுவர்':
சிங்கப்பூர் மரபுடைமையைப் பறைசாற்றும் உள்ளூர் உணவு வகைகளை பிராஸ் பாசா வட்டாரம் முழுவதும் உண்டு களிக்கலாம்.
ஆகஸ்ட் 19, 26 ஆகிய தேதிகளில் அமர்ந்து உண்பதற்குக் கட்டணம் ஒருவருக்கு ஐம்பது வெள்ளி. ஆகஸ்ட் 20, 27 ஆகிய தேதிகளில் உல்லாசச் சுற்றுலா போன்ற ஏற்பாட்டில் கலந்துகொண்டு உணவருந்த ஒருவருக்குக் கட்டணம் 35 வெள்ளி.
'எக்ஸ்ப்ளோர் எஸ்ஜி நைட் ஃபெஸ்ட் வித் ரிக்ஷா:'
சிங்கப்பூர் இரவுத் திருவிழாவை 'ரிக்ஷா' எனப்படும் மூன்று சக்கர வாகனத்தில் ஏறியும் சுற்றிப்பார்க்கலாம். அக்கால சிங்கப்பூரில் இது பலரும் பயன்படுத்திய போக்குவரத்தாக இருந்தாலும் இப்போது சுற்றுப்பயணிகள் மட்டுமே இதில் பயணம் செய்கின்றனர். வழக்கமாக ஒருவருக்கு 49 வெள்ளி செலுத்த வேண்டிய 'ரிக்ஷா' பயணத்திற்கு, இரவுத் திருவிழாவின்போது இருவருக்கு 40 வெள்ளி செலுத்தினால் போதும்.
ஆகஸ்ட் 19, 20, 26, 27 ஆகிய தேதிகளில் இரவு எட்டு மணி முதல் பத்து மணி வரை இந்தப் பயணத்தை மேற்கொள்ளலாம்.