பிறர் உணர்வுகளைப் புரிந்து நடந்துகொள்ளாதவர்களை இதயமற்றவர்கள் என்று சாடுவது வழக்கம். அதேபோல, உணர்வுகளைத் தொலைத்து வாழ்பவர்களை இயந்திர வாழ்க்கை வாழ்வதாக நாம் குறிப்பிடுவதுண்டு.
'இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ' என்ற திரைப்பாடலை, இதெல்லாம் நடக்கக்கூடியதா என்ற புன்சிரிப்புடன் கடந்து போயிருப்போம். ஆனால் வருங்காலத்தில் இது சாத்தியமானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அண்மையில் சியாவ்மி நிறுவனம் 'சைபர்ஒன்' எனும் இயந்திர மனிதக் கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது.
நடக்கவும் ஓடவும் கூடிய இது, 1.77 மீட்டர் உயரமும் 52 கிலோகிராம் எடையும் கொண்டது. செயற்கை நுண்ணறிவாற்றல் தொழில்நுட்பத்தில் செயல்படும் இதன் இரு கைகளையும் விரித்தால் அவற்றுக்கு இடையிலான இடைவெளி 168 செ.மீ. இருக்கும்.
ஒரு கையில் ஒன்றரை கிலோகிராம் எடையைத் தூக்கும் வல்லமை கொண்ட 'சைபர்ஒன்' தன்னைச் சுற்றியுள்ளோரின் குரல்களில் இழையோடும் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி, சோகம் என கிட்டத்தட்ட 45 வகையான மனித உணர்வுகளை இது அடையாளம்காணும்.
முகப் பகுதியில் 'ஓஎல்இடி' திரை, காதுகளாகச் செயல்படும் ஒலிவாங்கிகள், மூன்று கோணங்களில் பார்க்க உதவும் இரண்டு கேமராக் கண்கள் கொண்டிருக்கும் இந்த இயந்திர மனிதனை உருவாக்க ஏறத்தாழ ஒரு லட்சம் டாலர் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

