'காதால் கேட்பதெல்லாம் மெய்யல்ல' என்று பெரியவர்கள் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம்.
பொதுவாகவே இதை நாம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்றபோதும் குறிப்பாக உணவு குறித்த ஆலோசனைகளைக் கேட்க நேரிட்டால் கட்டாயம் அதன் உண்மைத்தன்மையைத் தீர விசாரித்து அறிந்துகொண்ட பிறகு முடிவெடுக்க வேண்டியது நம் கடமை.
உடல் எடையைக் குறைக்க விரும்புகிறீர்கள் எனத் தெரிந்துகொண்டாலோ உடல்நலப் பிரச்சினையில் இருந்து மீளும் சூழலில் இருந்தாலோ தெரிந்தவர், தெரியாதவர், நண்பர் எனப் பல தரப்பினரும் என்னென்ன சாப்பிட வேண்டும், எப்படி, எப்போது சாப்பிட வேண்டும் என்று அறிவுரை கூறத் தொடங்கிவிடுவார்கள்.
'என்ன செய்தால் நமது எண்ணம் கைகூடும்' என்ற தவிப்பில், கேட்பதையெல்லாம் அப்படியே நம்பி அதைக் கடைப்பிடிக்கக் கூடாது. அப்படிக் கூறப்படும் ஆலோசனைகளில் சிலவற்றின் உண்மைத்தன்மை குறித்து வல்லுநர்கள் கருத்துரைத்துள்ளனர்.
முதலில் காய்கறிகளை உண்டால் அதிகம் சோறு சாப்பிட இயலாது; அதனால் எடை குறையும் என்று பலரும் சொல்வார்கள். இது ஒருவிதத்தில் உண்மையே என்கிறார்கள் வல்லுநர்கள்.
காய்களோடு உணவைத் தொடங்கினால் அதன் பிறகு கலோரிகள் அதிகமுள்ள உணவுவகைகளை அதிகம் உண்ண இயலாது. ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால் காய்கறிகளைப் பச்சையாகவோ சமைத்தோ உண்பதற்குப் பதில் அவற்றைச் சாறு பிழிந்து குடித்துவிட நினைத்தால் பலனிருக்காது என்பது வல்லுநர்களின் எச்சரிக்கை.
ஏனெனில் சாற்றில் நார்ச்சத்து இல்லை. காய், பழம் ஆகியவற்றில் உள்ள நார்ச்சத்தால்தான் அவற்றை உண்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு மற்ற உணவுவகைகளை நாம் அதிகம் உண்பதில்லை. சாறு பிழிந்து குடித்தால் அதனால் பலனில்லை.
பழங்களை வெறும் வயிற்றில்தான் உண்ண வேண்டும். உணவுக்குப் பிறகு பழம் சாப்பிட்டால் அது நொதித்து செரிமானக் கோளாற்றை உருவாக்கும்; வாயுத்தொல்லை ஏற்படும் என்று சொல்லப்படுவதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உணவுக்கு முன் தண்ணீர் அருந்தினால் செரிமானம் பாதிக்கும் என்பதற்கும் ஆதாரம் இல்லை. உண்மையில் அது செரிமானத்துக்கு உதவும் என்று கூறப்படுகிறது. அதேபோல 'அல்கலைன்' எனப்படும் காரத்தன்மை நிறைந்த நீரைக் குடித்தால் புற்றுநோய் வராது என்று சொல்லப்படுவதற்கும் அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை என்பதை ஊட்டச்சத்து வல்லுநர்கள் சுட்டுகின்றனர்.

