கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பவை தமிழ்ப் பழமொழிகள். காலையில் எழுந்தவுடன் குளிப்பதே பல நன்மைகள் தரும் என்று காலம் காலமாகக் கூறப்பட்டுள்ளது.
குளிப்பது என்ற சொல்லே குளிர்விப்பது என்ற சொல்லிலிருந்து மறுவியது என்ற கூற்று உள்ளது. இரவில் உறங்கி காலையில் எழுந்தவுடன் ஒருவரது உடல் சூடாக இருக்கும். அதை குளிர்ச்சியாக மாற்றுவதற்கு காலையில் குளித்தல் அவசியம். அதனால் குளிர்ந்த நீரில் குளிப்பது அவசியம்.
சளி, காய்ச்சல் உள்ளவர்கள் மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் குளிக்கலாம். அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சியான நீர் உடலுக்கு நல்லதல்ல.
உடற்பயிற்சியின்போது வரக்கூடிய வியர்வை நீங்க குளிப்பது அவசியம். நம் உடலின் தோலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய துவாரங்களை அழுக்குகள் அடைப்பதால் நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
குளிக்கும்போது, முதலிலேயே தலையில் நீர் ஊற்றக்கூடாது. அவ்வாறு ஊற்றினால் உடல் சூடு மீண்டும் கால் பாதத்துக்குத்தான் செல்லும். அதனால், முதலில் கால் பாதத்தில் இருந்து மேல்நோக்கி ஊற்றி கடைசியில் தலைக்குத் தண்ணீரை ஊற்ற வேண்டும்.
உடற்பயிற்சியை முடித்தவுடன் தண்ணீர் குடிக்கவோ குளிக்கவோ கூடாது. சுமார் 20 நிமிடம் கழித்துதான் தண்ணீர் குடிக்கவோ குளிக்கவோ வேண்டும். குளிப்பதற்கு முன்னர் உணவு உண்ணக்கூடாது.
குளிப்பதற்கு முன் தலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் குளிர்ச்சி யடையும். வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
தலைக்குத் தேய்க்க தேங்காய் எண்ணெய் நல்லது. நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் அதிக குளிர்ச்சி அடையலாம்.
குளிக்கும்போது கைகள், கால்கள், விரல்கள், பாதங்கள், நகங்கள் ஆகியவற்றை நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
குளிக்கும்போது ஒரு கால் பாதத்தால் இன்னொரு காலை தேய்த்து கழுவக் கூடாது. காலில் சிலருக்கு பித்த வெடிப்பு இருக்கலாம். இந்த வெடிப்பு கூர்மையானதாக இருக்கும். இது மற்றொரு காலில் உள்ள தோலைச் சேதப்படுத்தும். எனவே, குனிந்து கைகளை வைத்து கால்களைக் கழுவ வேண்டும்.
காலையில் குளித்தாலும் வெளியில் செல்லும்போது சேரும் மாசு, கிருமிகள், எண்ணெய்ப் பசை ஆகியவற்றைச் சுத்தம் செய்ய மாலைக் குளியல் நல்லது.
தகவல்: இணையம்

