பிரதீப் பால்
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்குக்கும் எனக்கும் ஒற்றுமை உண்டு என்று சொல்ல இப்போது எனக்குக் காரணம் இருக்கிறது. இருவரும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை ஓட்டியிருக்கிறோம் என்பதுதான் அது.
சரி, பல மில்லியன் பேரும் அதையே செய்திருக்கின்றனர். ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் இந்தியாவில்தானே உற்பத்தி செய்யப்படுகிறது. என் கல்லூரி நாள்களை இது எனக்கு நினைவுபடுத்துகிறது.
1980களின் தொடக்கத்தில் இருந்த அந்த நாளில் என் நண்பர்கள் சிலருக்கும் எனக்கும் மோட்டார்சைக்கிள்கள் இருந்தன. என்னுடையது பழைய ஜாவா இரு கோட்டு 250 ரக மோட்டார்சைக்கிள். செக்கஸ்லோவாக்கியாவில் உற்பத்தி செய்தது. என் நண்பர் களுக்கு ராஜ்தூத், மினி புல்லட் போன்றவை இருந்தன. அவை என்னுடையதைவிட சிறிய இயந்திரங்களைக் கொண்டவை. ஒரு நண்பர் இந்திய மோட்டார்சைக்கிள்களின் அந்நாளைய ஜாம்பவானான நான்கு கோட்டு 350 சிசி ரக ராயல் என்ஃபீல்டை வைத்திருந்தார்.
(ஜாவாவுடன் ஒப்பிடுகையில்) அது மிகவும் கனமானது. இயக்கினால் முதலில் வேகமாகச் செல்லாது. பார்ப்பதற்கு பழமையானதாக இருக்கும். ஆனாலும் அதை ஓட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் ஒரு சிக்கல் உண்டு. அந்நாளைய என்ஃபீல்டுகளில் கியர் நெம்புகோல் வலது பக்கத்திலும் கால் பிரேக் நெம்புகோல் இடதுப் பக்கத்திலும் இருந்தது. எங்களுக்குத் தெரிந்த எல்லா மோட்டார்சைக்கிள்களிலும் அதற்கு நேர் மாறாக இருந்தன.
ஜாவாவின் வடிவமைப்புக்கு பழகியிருந்த நான் சிக்கலில் மாட்டிக்கொள்வேன். பிரேக் போட நினைத்து, மோட்டார்சைக்கிளின் கியரைப் போட்டு வேகத்தைக் கூட்டிவிடுவேன். வேகமாகச் செல்வதற்காக கியரை அழுத்திவிட்டு பிரேக்கைப் போட்டுவிடுவேன். அது நிச்சயம் பாதுகாப்பானதாக இருக்கவில்லை என்று கூறுவேன்.
இருப்பினும், அந்த மோட்டார்சைக்கிளில் செல்வதை மிகவும் ரசித்தேன். அது பெரிதாக இருந்தது. ஓரளவு வேகத்தில் செல்லும்போது தடுமாறாமல் நிலையாக இருந்தது மற்றும் நம்பகமானது.
பிரேக், கியர் நெம்புகோல்கள் மாறியிருந்ததால் ஏற்பட்ட குழப்பம், சாலைகளில் ராஜாவாக உலா வரும் உணர்வுக்கு நான் கொடுத்த சிறிய விலை ஆகும்.
அதிர்ஷ்டவசமாக ராயல் என்ஃபீல்டு மற்ற மோட்டார்சைக்கிள்களைப் போன்ற பிரேக்-கியர் கம்பி வடிவமைப்புக்கு 2010களின் தொடக்கத்தில் மாறியது. இதனால் அதில் ஏறுவதும் அதை கியர் போட்டு ஓட்டுவதும் எளிதானது.
இதனால்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நன்கொடை திரட்டு மோட்டார்சைக்கிள் ஓட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ரக மோட்டார்சைக்கிளை ஓட்டும்படி துணைப் பிரதமர் வோங்குக்கு பரிந்துரை செய்திருப்பார்கள்.
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது மோட்டார்சைக்கிள் ஓட்டிய அவரும் உற்சாகத்துடன் அதற்கு இணங்கினார். நமது அடுத்த பிரதமராகப் போகும் அவரது இன்னொரு போற்றத்தக்க, நம்முடன் பொருந்திப் பார்க்கக்கூடிய மற்றொரு பரிமாணத்தை அது காட்டியது.
வேலையில் மட்டும் அவர் திறன்படைத்தவர் மட்டுமல்ல. கித்தார் வாசிப்பவரும் நாய்ப் பிரியருமான அவர், மோட்டார்சைக்கிளும் ஓட்டுகிறார்!
துணைப் பிரதமர் ராயல் என்ஃபீல்டை ஓட்டியதால் எல்லா மோட்டார்சைக்கிள்களும் ஹோண்டா அல்லது யமாஹா போன்று ஜப்பானிலோ டுக்காட்டி போன்று இத்தாலியிலோ ஹார்லி டேவிட்சன் போன்று அமெரிக்காவிலோ உற்பத்தி செய்யப்படுகிறது என்ற எண்ணம் மாறிவிட்டது.
திடீரென்று எடை குறைந்த 'கஃபே ரேசர்' வகை மோட்டார்சைக்கிள்களில் முன்னணி இடத்துக்கு வந்துள்ள இந்த சற்று சிறிய மோட்டார்சைக்கிள் நிறுவனம் பற்றி மக்கள் கேட்டறியத் தொடங்கினர்.
திடீரென்று உலகம் எங்கும் உள்ள இந்தியர்கள் குறிப்பாக சிங்கப்பூரில் இருப்பவர்கள், தங்கள் அன்புக்குரிய புல்லட் மோட்டார்சைக்கிள்களின் பழைய மலரும் நினைவுகளைப் பற்றி பேசினர்.
ராயல் என்ஃபீல்டு இணையத் தளத்தில் ஏழு வகை மோட்டார்சைக்கிள்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துமே புல்லட்டின் மரபணுவில் அவற்றைப் போலவே உள்ள பழைய, பலரையும் கவரக்கூடிய வகையில் அமைந்துள்ளன.
அந்த மரபணுக் கூறு 1980களிலேயே என் மூளைக்குள் புகுந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், வேலையும் வானிலையும் ஒத்துழைக்கும்போது கஃபே ரேசர் வகை மோட்டார்சைக்கிளைத்தான் ஓட்டுகிறேன்.
ஆம் சில ஆண்டுகள் மெலிந்த சூப்பர்பைக் மோட்டார்சைக்கிளை வைத்திருந்தேன். ஆனால் யமாஹா ஆர்1 வகையைக் கொடுத்து பிஎம் டபுள்யூ ஆர்90டி ரக மோட்டார்சைக்கிளை வாங்கிய பிறகு வேகம் மீதான மோகம் தணிந்துவிட்டது.
ஒவ்வொரு முறையும் கியர் நெம்புகோலை உதைத்து, கிளட்ச் விசையை விடும்போது நான் புன்னகைக்கத் தவறுவதில்லை.
துணைப் பிரதமர் ஞாயிற்றுக்கிழமை அன்று மோட்டார்சைக்கிள் ஓட்டியபோது அதே புன்னகையைத்தான் அவர் முகத்தில் கண்டேன்.
மூலம்: தப்லா
பிரதீப் பால் தப்லா வார இதழின் முன்னாள் ஆசிரியர் ஆவார்.

